"தாதியரை அடிமையாக்காதே" தாதியர் போராட்டம்

நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் (03) தாதியர்கள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலும் தாதியர்கள் நேற்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர். இதன் போது அவர்கள் பின்வரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். அன்டிஜன் கடமை எங்களுக்கு மட்டுமா? உரிமைகளையும், சலுகைகளையும், அடிப்படை வசதிகளையும் வழங்க தாமதிக்காதே, நாம் நோயாளிகளுக்கான சேவையினை தடையின்றி ஆற்ற போக்குவரத்து வசதி செய்து கொடு, சுகாதார ஊழியர்களுக்குரிய முகக்கவசம், பாதுகாப்பான உடை என்பவற்றை தொடர்ச்சியாக வழங்கு, எமது கோரிக்கைகளுக்கு மதிப்பளி, தாதியர்களை அடிமையாக்காதே எம்மையும் பேசவிடு, எமது கருத்துக்களுக்கு செவி மடு போன்ற வாசகங்கள் எழுப்பட்ட சுலோகங்களை தாங்கிய அட்டைகளையும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தாதியர்கள் ஏந்தியிருந்தனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

கிழக்கில் அரச வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்கள் பணி புறக்கணிப்பு

அரச தாதி உத்தியோகஸ்தர் சங்கத்தின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் நேற்று (03) கொரோனா சிகிச்சைக்குரிய சகல அடிப்படை வசதிகளையும் செய்து தரக்கோரி, வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து சுலோக அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பகிஷ்கரிப்பை செய்திருந்தனர்.

போதியளவு கையுறைகள் முகக்கவசங்களை தங்குதடையின்றி வழங்கு, கொவிட் தடுப்பூசி பராமரிப்பில் நோயாளியுடன் நெருங்கிப் பணியாற்றும் எமது குடும்பத்திற்கும் வழங்கு, நாம் நோயாளிகளுக்கான சேவையை தடையின்றியாற்ற போக்குவரத்து வசதி செய்து கொடு, பொதுமக்களின் உயிராபத்தைக் குறைப்பதற்கான பராமரிப்பை கொடுக்க எமக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கு,
கொவிட் தடுப்பூசி ஏற்றாத சுகாதாரப் பணிக் குழுவினருக்கு உடனடியாக ஏற்று என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அதேவேளை, கிண்ணியா தள வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைக்குரிய சகல அடிப்படை வசதிகளையும் செய்து தரக்கோரி வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் நேற்று ஒரு மணி நேர பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ஒலுவில் கிழக்கு தினகரன், கிண்ணியா மத்திய நிருபர்கள்)

Fri, 06/04/2021 - 11:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை