தடுப்பூசியை தயக்கமின்றி ஏற்றிக்கொள்ள வலியுறுத்தல்

- முஸ்லிம்களிடம் உலமா சபை வேண்டுகோள்
- ஊசியை ஏற்ற மார்க்கத்தில் அனுமதியுள்ளது

கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தங்களையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம்களை வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக தடுப்பூசி ஏற்றிக்கொள்வது பற்றிய வழிகாட்டல் ஒன்றையும் உலமா சபை வெளியிட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பதில் தலைவர் அஷ்-ஷைக் ஏ. ஜே. அப்துல் ஹாலிக், விடுத்துள்ள அறிக்கையில் அதுபற்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுவாக நோய் ஏற்பட்டால் அதற்குரிய மருத்துவ சிகிச்சை செய்யுமாறும் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். தொற்றுநோய் ஏற்பட்டாலும் அத்தகைய நோய் உள்ளவர்களுடன் சேர்ந்து இருப்பது சிலவேளை, அந்நோய் உண்டாகக் கூடிய காரணிகளில் ஒன்றாகலாம் என்ற காரணத்தினால், அத்தகைய நோய் காணப்படும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கை மார்க்கத்தில் வழிகாட்டப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு நோய் ஏற்படாவிட்டாலும், அதன் தாக்கத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னெச்சரிக்கையுடன் அதற்கான தற்காப்பு விடயங்களை செய்துகொள்வதற்கு மார்க்கம் வழிகாட்டியுள்ளது.

வைத்தியத் துறையைப் பொறுத்தவரையில் மார்க்க வழிகாட்டல்களுக்கு அமைவாக சிகிச்சைகள் பெற்றுக்கொள்ள இஸ்லாம் அனுதித்துள்ளதுடன், வைத்தியம் செய்யும் விடயத்தில் நம்பிக்கையான துறைசார்ந்த அனுபவமுள்ள வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும்படியும் அது வழிகாட்டியுள்ளது.

உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள நம்நாடும் இன்னோரன்ன வழிகாட்டல்களை வழங்கி வருகிறது. அவற்றில் இந்நோயிலிருந்து காத்துக்கொள்வதற்காக ஏற்றப்படும் தடுப்பூசியும் மிக முக்கிய ஒன்றாகும். இவ்வடிப்படையில், கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தற்பாதுகாப்புப் பெறுவதற்காக எமது நாட்டின் சுகாதார திணைக்களம் வழங்கியுள்ள வழிகாட்டல்களை பேணுவதுடன், இத்தடுப்பூசி விடயத்தில் அனுபவமுள்ள நம்பிக்கைக்குரிய வைத்தியர்களிடம் இது பற்றிய ஆலோசனைகளைப் பெற்று, தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 06/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை