மிஹிந்தலை புண்ணிய பூமி ஜனாதிபதியினால் ஒளியேற்றம்

அரச பொசன் விழா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பங்கேற்புடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிஹிந்தலை புண்ணிய பூமியில் (24) நடைபெற்றது.

இவ்வருட பொசன் நோன்மதித் தினத்துடன், மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகைத் தந்து 2,329 வருடங்கள் நிறைவடைகின்றன. “உலகவாழ் அனைத்து மக்களுக்கும் நலம் கிட்டும்” என்பதே இவ்வருட அரச பொசன் விழாவின் கருப்பொருளாகும்.

மிஹிந்தலை புண்ணிய பூமியை மையமாகக் கொண்டு, 21ஆம் திகதி முதல் நாளை வரை நடைபெறும் பொசன் வாரத்தில், ரத்னசூத்திர உரை, சமய உரைகள், கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மிஹிந்தலை புண்ணிய பூமிக்கு வருகை தந்த ஜனாதிபதி, புனித தந்தத்தை வழிபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வலவா ஹெங்குன வெவே தம்மரத்ன நாயக்க தேரரினால் அரச பொசன் விழா பற்றிய உரை நிகழ்த்தப்பட்டது.

இப்புண்ணிய நிகழ்வு சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் வீடியோ தொழிநுட்பத்தினூடாக நிகழ்வில் உரையாற்றினார்.

அரச பொசன் விழாவுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மிஹிந்தலை (ஒளி விளக்கு) ஆலோக்க பூஜையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆரம்பித்து வைத்தார்.

லேக் ஹவுஸ் நிறுவனத்தினதும் இலங்கை மின்சார சபையினதும் இணை அனுசரணையில் 59ஆவது தடவையாக இந்த புண்ணிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்ரீ லங்கா டெலிகொம் மொபிடெல் நிறுவனம் வடிவமைத்துள்ள மிஹிந்தலை புண்ணிய பூமியின் முப்பரிமாண காட்சி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. Poson.sltmobitel.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மிஹிந்தலை புனித பூமியை பார்வையிடுவதற்கு இதன் மூலம் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர்களான பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, எஸ்.எம்.சந்திரசேன, வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத், இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பிரேமரத்ன, கே.பி.எஸ்.குமாரசிறி, அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Sat, 06/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை