கொவிட் அறிகுறிகள் இருந்தால் செல்லப் பிராணிகளிடம் நெருங்க வேண்டாம்!

கொவிட் அறிகுறிகள் இருந்தால் செல்லப் பிராணிகளிடம் நெருங்க வேண்டாம்!-COVID19 Spreading to Animals-Beware

- பேராதனைப் பல்கலை கால்நடை மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் அறிவுரை

இலங்கையில் சிங்கமொன்றிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், காய்ச்சல், சளி போன்ற கொவிட்-19 நோய் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகியிருத்தல் உசிதமென பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டிலான் ஏ. சத்தரசிங்க தெரிவித்துள்ளார்

கொவிட் வைரஸ் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் தொற்றுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதால், வைரஸ் தொற்றுடன் உள்ளவர்கள் பூனை இனத்தைச் சேர்ந்த பிராணிகளிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். இத்தகைய வகையைச் சேர்ந்த செல்லப்பிராணிகளை நெருங்கும் பட்சத்தில், அந்தப் பிராணிகளுக்கும் தொற்று ஏற்படலாம் என கலாநிதி சத்தரசிங்க தெரிவித்தார்.

தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் கொவிட் தொற்றிய சிங்கத்திற்கான பரிசோதனைகள் பற்றி பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர், தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் அவதானிக்கும்போது, உயிரியல் ரீதியாக பூனை வகையைச் சேர்ந்தவையாக அடையாளப்படுத்தப்படும் சிங்கங்கள், புலிகள் போன்ற விலங்குகளுக்கு கூடுதலாக கொவிட் தொற்றி உள்ளமை புலனாகிறது. இதற்கு முன்னர், அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மிருகக் காட்சிசாலைகளில் சிங்கங்களுக்கும், புலிகளுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தது. இவற்றிற்கு மனிதர்கள் மூலம் வைரஸ் பரவியிருக்கலாம் என மருத்துவவர்கள் தெரிவிக்கின்றனர்.

தெஹிவளை மிருகக்காட்சி யில் உள்ள சிங்கத்திற்கு வைரஸ் தொற்றிய விதத்தைக் கண்டறிவதற்கு மரபணு பரிசோதனை அவசியப்படுகிறது. இந்த சிங்கத்துடன் சேர்ந்து வாழ்ந்த பெண் சிங்கத்திற்கும், மூன்று குருளைகளுக்கும் வைரஸ் தொற்றக்கூடிய சாத்தியமும் உள்ளது. மிருகக் காட்சிசாலையிலுள்ள உள்ளுர் குரங்கினமொன்றின் மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நாய்களுக்கு கொவிட் தொற்றியதாக அறிவிக்கப்பட்ட சம்பவங்கள் மிகவும் குறைவென பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டிலான் ஏ.சத்தரசிங்க மேலும் குறிப்பிட்டார்.

(எம்.ஏ. அமீனுல்லா)

Sun, 06/20/2021 - 17:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை