நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மத்திய மலை நாட்டிலும் கடும் மழை பெய்து வருகிறது. நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்ததால் சில நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கெனியோன், லக்ஷபான ஆகிய இரு நீர்த்தேக்கங்களில் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், விமலசுரேந்திர நீர் தேக்கத்தில் நீர் வான் பாய்ந்து வருவதாகவும் மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.எனவே இந்த நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் காசல் ரீ நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்ந்து வான் பாயும் அளவை எட்டியுள்ளதுடன் மவுசாகலை நீர்த்தேக்கத்தில் நீர் மட்டமும் கணிசமானளவு உயர்ந்துள்ளது.இந் நீர்த்தேக்கங்களின் நீரைப் பயன்படுத்தி உச்சளவு மின் உற்பத்தி செய்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் மலைகளுக்கும் மண் மேடுகளுக்கும் அருகாமையில் வாழும் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் மண் சரிவு அபாயம் காணப்பட்டால் அவ்விடங்கள் இருந்து ஒதுங்கி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Thu, 06/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை