இஸ்ரேலின் புதிய கூட்டணி அரசுக்கு எதிராக நெதன்யாகு கடும் எச்சரிக்கை

‘இஸ்ரேல் பாதுகாப்பு, எதிர்காலத்திற்கு ஆபத்து’

இஸ்ரேலில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் புதிய ஐக்கிய அரசு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். தீவிர தேசியவாதத் தலைவரான நப்டாலி பென்னட், மையவாதக் கட்சி ஒன்றுடன் அதிகாரத்தை பகிரப்போவதாக அறிவித்த நிலையில் அதில் இணைய வேண்டாம் என்று வலதுசாரி அரசியல்வாதிகளுக்கு நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய அரசொன்றை அமைப்பதற்கு நெதன்யாகு எதிர்ப்பாளர்களுக்கு நாளை புதன்கிழமை வரை அவகாசம் உள்ளது.

அவர்கள் அதில் வெற்றிபெற்றால், இஸ்ரேலில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்திருக்கும் நெதன்யாகுவின் ஆட்சிக் காலம் முடிவுக்கு வரும்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்திருக்கும் நெதன்யாகு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொரும்பான்மை பெறத் தவறினார். இது இஸ்ரேலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற நான்காவது தேர்தலாக இருந்ததோடு தொடர்ச்சியாக எந்தக் கட்சியும் போதிய பெரும்பான்மையை பெறத் தவறியது.

‘இடதுசாரி அரசொன்றை உருவாக்க வேண்டாம். அவ்வாறான அரசு இஸ்ரேல் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்கு ஆபத்தானது’ என்று 71 வயதான நெதன்யாகு எச்சரித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருக்கும் அவர், ஒரு தலைமுறையாக இஸ்ரேல் அரசியலில் செல்வாக்கு செலுத்துபவராக உள்ளார்.

பென்னட் இஸ்ரேல் மக்களை தவறான வழியில் திசைதிருப்புவதாக குற்றம்சாட்டிய நெதன்யாகு, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய 49 வயதான பென்னட், தமது கட்சி கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

‘நெதன்யாகு தொடர்ந்தும் வலதுசாரி அரசொன்றை அமைப்பதற்கு முயற்சிக்க முடியாது. அப்படி ஒன்று இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அரவது தனிப்பட்ட நிலைப்பாட்டுடன் ஒட்டுமொத்த தேசிய முகாம் மற்றும் ஒட்டுமொத்த நாட்டையும் பெறுவதற்கு முயல்கிறார்’ என்று பென்னட் தெரிவித்தார்.

இஸ்ரேலின் வலது, இடது மற்றும் மையவாத அரசியல் கட்சியை ஒன்றிணைத்த கூட்டணி அரசொன்றை அமைக்கவே பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெதன்யாகுவின் பதவிக் காலத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலேயே அரசியலில் பிளவுபட்டுள்ள கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. முன்னதாக கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கு நெதன்யாகுவுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவில் அதனை செய்ய அவர் தோல்வி அடைந்ததை அடுத்தே யெயிர் லபிட்டிற்கு அந்த அவகாசம் வழங்கப்பட்டது. அவருக்கான காலக்கெடு நாளை ஜூன் 2 ஆம் திகதி முடிவடைகிறது. கடந்த தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு அடுத்து அவரது யெஷ் அடிட் கட்சி இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்நிலையில் 120 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் பென்னட்டின் கட்சி தீர்க்கமான 6 இடங்களை பெற்றிருக்கும் நிலையிலேயே அவர் கூட்டணி அரசுக்கு ஆதரவை அளித்துள்ளார்.

இந்நிலையில் நெதன்யாகுவின் கடுமையான எதிர்வினை மூலம் அவரால் சில பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற முடிந்தால், புதிய கூட்டணி அரசு அமைக்கும் திட்டம் ஆட்டம் காணும்.

புதிய கூட்டணி அரசு பதவியேற்றாலும் கூட அது முரண்பாடுகளின் தொகுதியாகவும் முறிந்துபோகும் தன்மை கொண்டதாகவும்தான் இருக்கும். அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பல முக்கிய விவகாரங்கள் மேலும் சிக்கலாவதற்கும் வாய்ப்புள்ளது.

பென்னட்டுக்கு சுழற்சி முறையில் பிரதமர் பதவியை வழங்குவதற்கு நெதன்யாகுவின் லிகுட் கட்சி கடந்த சனிக்கிழமை ஒப்புக் கொண்டது. ஆனால் இதை பென்னட் ஏற்கவில்லை. நெதன்யாகு இதே திட்டத்தை மீண்டும் முன்வைத்துள்ளார். இஸ்ரேலின் விகிதாசார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் கீழ் எந்தக்கட்சிக்கும் தனியாக பெரும்பான்மை கிடைப்பது மிகவும் கடினம். அதன் சிறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

Tue, 06/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை