மழையுடனான காலநிலை இன்றும் தொடரும்; 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

- 6 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்
- களுகங்கை, கின் கங்கை நீர்மட்டம் உயர்வு
- களுத்துறையில் அதிக மழைவீழ்ச்சி பதிவு

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் குறிப்பாக மேல், சப்பிரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இப் பிரதேசங்களில் இன்று (04) வெள்ளிக்கிழமை 150 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதனன்று களுத்துறை மாவட்டத்தில் 200 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்நிலையில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று 09 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு , 06 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய 09 மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடுமென்று வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (03) வியாழக்கிழமை அதிகாலை 01.00 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 வரை இந்த எச்சரிக்கை செல்லுபடியாகுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இம்மாவட்டங்களில் துரிதமாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கொழும்பு , காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சீதாவாக்கை பிரதேச செயலகப் பிரிவுக்கும், காலியில் நெலுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும், களுத்துறையில் பாலிந்தநுவர மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தறையில் பிட்டபெத்தர பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியாவில் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரியில் அயகம, குருவிட்ட, எஹெலியகொட மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையான காலப்பகுதியில் 200 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய பிரதேசத்தில் 215.5 மி.மீ. மழை வீழ்ச்சியும் , ஹொரணையில் 170.5 மி.மீ. மழை வீழ்ச்சியும் , பாலிந்தநுவர பிரதேசத்தில் 129 மி.மீ. மழை வீழ்ச்சியும் , இரத்தினபுரி மாவட்டம் – கிரியெல்ல பிரதேசத்தில் 112 மி.மீ. மழை வீழ்ச்சியும் , கொழும்பு மாவட்டம் – பாதுக்க பிரதேசத்தில் 111.5 மி.மீ. மழை வீழ்ச்சியும் , காலி மாவட்டம் – தெல்லவ பிரதேசத்தில் 105 மி.மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

நேற்றுமுன்தினமிரவு பெய்த மழை காரணமாக களுகங்ககை, கின் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. மழை தொடருமானால் இவற்றின் நீர் மட்டம் மேலும் உயர்வடையக் கூடும் என்று நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மேற்கு திசையிலிருந்து தெற்கு திசை நோக்கி காற்று வீசும். இதன் போது காற்றின் வேகம் 30 – 40 கிலோ மீற்றராகக் காணப்படும். அத்தோடு காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது 50 – 55 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இவ்வாறான செயற்பாடுகளில் கடல்சார் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை