உலக நாடுகளுக்கு 80 மில். தடுப்பூசிகள் வழங்கும் USA

அமெரிக்கா உலக நாடுகளுக்கு 80 மில்லியன் கொவிட்–19 தடுப்பூசிகளை விநியோகம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அவற்றுள் 75 வீதம், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கொவக்ஸ் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

லத்தின் அமெரிக்க நாடுகள், கரீபிய நாடுகள், தெற்காசியா, தென்கிழக்காசியா, ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

அங்குள்ள நாடுகள் புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முயன்றுவரும் நிலையில் அவற்றுக்கு உதவ விரும்புவதாக அமெரிக்கா குறிப்பிட்டது.

முதல் 25 மில்லியன் தடுப்புமருந்தை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது நடைபெறுவதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறினார். இம்மாத இறுதிக்குள் 80 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் வயதானவர்களில் 62.9 வீதமானவர்களுக்கு குறைந்தது ஒரு முறையேனும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டிருப்பதோடு அந்நாட்டில் 133.6 மில்லியன் பேர் முழுமையான தடுப்பு மருந்தை பெற்றிருப்பதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பிற நாடுகளில் இருந்து ஆதாயங்களை பெறுவதற்கு அமெரிக்கா இதனை பயன்படுத்தாது என அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சல்லிவன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:-

“உலகம் தற்போது சந்தித்து வரும் கொரோனா பேரிடரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே நமது நோக்கமாகும். தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும். உலக நாடுகளுடன் தடுப்பூசிகளை பகிர்ந்து அளிக்கும் நிலையில் தற்போது அமெரிக்கா உள்ளது.

அதேநேரம் ஜனாதிபதி ஜோ பைடன் கூறியது போல், அமெரிக்க அரசு தடுப்பூசிகளை பகிர்ந்து அளிக்கும் நாடுகளிடம் எந்த ஆதாயத்தையும் பயன்படுத்திக் கொள்ளப்போவது இல்லை. பல்வேறு நாடுகளில் இருந்து தடுப்பூசிக்கான கோரிக்கை வந்துள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடுகளான பெரு, ஈக்வடோர், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார்.

Sat, 06/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை