சைனோபாம் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஜூன் 8 ஆம் திகதி முதல்

முதலாவது ஊசி பெற்ற அதே இடத்தில் வழங்க ஏற்பாடு

சைனோபாம் இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டமிட்டபடி எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி முதல் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கிணங்க முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள ஒருமாத காலத்தில் முதலாவது கட்ட தடுப்பூசி வழங்கப்பட்ட அதே இடங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளையும் வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.

தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அதற்கிணங்க தற்போது நாட்டின் பல்வேறு மாவட்டங்களையும் கேந்திரமாக கொண்டு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. நாட்டில் நேற்று முன்தினம் வரை மொத்தமாக 16 லட்சத்து 8 ஆயிரத்து 518 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

சைனோ பார்ம் முதற்கட்ட தடுப்பூசி 6 லட்சத்து 66 ஆயிரத்து 612 பேருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் ஒரு தினத்தில் மாத்திரம் 65,104 பேருக்கு அந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அன்றையதினம் 1680 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க நேற்று முன்தினம் வரை எஸ்ட்ரா செனேகா முதற்கட்ட தடுப்பூசி 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கும் இரண்டாவது கட்ட தடுப்பூசி மூன்று இலட்சத்து 45 ஆயிரத்து 789 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சைனோபார்ம் தடுப்பூசி முதற்கட்டமாக 6 இலட்சத்து 66 ஆயிரத்து 612 பேருக்கும் இரண்டாம் கட்டமாக இரண்டு இலட்சத்தி 435 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஸ்புட்னிக் வி முதற்கட்டமாக 16 ஆயிரத்து 664 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அதேவேளை நேற்றைய தினமும் கண்டி, குருநாகல், யாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்களில் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது. (ஸ)

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 06/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை