பத்து விமானங்களில் 768 பேர் நேற்று நாட்டை வந்தடைவு

கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் நேற்றையதினம் பயணிகள் விமான சேவைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் 10 பயணிகள் விமானம் மூலம் 768 பேர் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி தெரிவித்தார். நேற்றைய தினம் அதிகாலை 12 மணி முதல் மதியம் 12 மணி வரையான காலப்பகுதியில் மேற்படி விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கிணங்க மத்திய கிழக்கு நாடுகளான கட்டார் இராஜ்ஜியம், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், ஜேர்மன் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து மேற்படி பத்து விமானங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் அத்துடன் மேலும் 296 விமானப் பயணிகள் நாடு திரும்பவிருந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதேவேளை இந்தியா மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வரவிருந்த பயணிகள் விமானங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மத்தள விமான நிலையத்திற்கும் நேற்றையதினம் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் வருகை தந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பும் அனைவரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவதுடன் 14 தினங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என ஏற்கனவே சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Wed, 06/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை