சவூதியில் உள்ள 60 ஆயிரம் பேர் மாத்திரம் இம்முறை ஹஜ் செய்வர்

சவூதியில் உள்ள 60 ஆயிரம் பேர் மாத்திரம் இம்முறை ஹஜ் செய்வர்-Saudi Arabia limited to 60,000 citizens and residents for Hajj Pilgrimage

- சவூதி அரசாங்கம் அறிவிப்பு

சவூதி அரேபியாவில் வாழும் மற்றும் அந்நாட்டு பிரஜைகள் உள்ளிட்ட உள்நாட்டிலுள்ள 60,000 பேர் மட்டுமே இவ்வாண்டு புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என, சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்நாட்டு அரச ஊடகத்தில் நேற்று (12) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொவிட் தொற்று பரவல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு புனித ஹஜ் யாத்திரை ஜூலை நடுப்பகுதியளவில் ஆரம்பிக்கிறது.

தற்போது கொவிட் தொற்று பரவலால், இம்முறை வெளிநாட்டிலிருந்து வரும் எவருக்கும் ஹஜ் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், உள்நாட்டிலுள்ள 60,000 பேர் மட்டுமே புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதோடு, இந்த முடிவை ஹஜ் உம்ரா அமைச்சுகள் இணைந்து எடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஹஜ் யாத்திரையில் பங்குபற்றுவோர் 18 - 65 வயதுக்குட்பட்டவர்களாகவும், எவ்வித தொற்றுநோய்களையும் கொண்டிருக்கக் கூடாது எனவும் தடுப்பூசி பெற்றிருப்பதும் அவசியமெனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டே, வெளிநாட்டிலிருந்து சவூதி அரேபியா சென்றுள்ள ஆயிரக் கணக்கானோலும் இவ்வாண்டு புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளதாக அதில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்கு மத்தியில், அதனை பரவலைக் கருத்திற் கொண்டு, கடந்த வருடம் சவூதி அரேபிய பிரஜைகள் மற்றும் அங்கு வசிக்கும் 1,000 பேர் மாத்திரம் ஹஜ் யாத்திரை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, மூன்றில் ஒரு பங்கினர் சவூதி அரேபிய பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் மருத்துவ சேவை ஊழியர்களாவர்.

சவூதி அரேபியாவில் இது வரை 463,000 இற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 7,536 பேர் மரணமடைந்துள்ளனர்.

உடல், பொருள் வசதியுள்ள முஸ்லிம்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவையேனும் மேற்கொள்ள வேண்டிய இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாக புனித ஹஜ் யாத்திரை விளங்குகிறது.

Sun, 06/13/2021 - 14:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை