5 வருட ஆட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது; எக்கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

எந்தக் கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு 05 வருட ஆட்சிக்கான ஆணையை ஏற்கனவே வழங்கியுள்ளனரென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சூழ்நிலையால் சில சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது எனினும் சவால்கள் வெற்றி கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் மாநாடு நேற்று பத்தரமுல்லயிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

மீண்டும் பாராளுமன்றத்துக்கு வருகின்ற ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அது மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தால் அரசாங்கத்துக்கு அது சவாலாக மாறுமா? என ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

அரசியலில் நாளை என்ன நடக்கும் என்பது கூற முடியாது. நாட்டின் வரலாற்றில் அவற்றை பார்த்திருக்கின்றோம். எதிரிகளாக இருந்தவர்கள் ஒரு மணி நேரத்தில் நண்பர்களாக மாறுவார்கள். தேர்தல் காலத்தில் அவற்றை அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் எந்தவிதமான இணைப்புக்கள் ஒன்று சேரல்கள் இடம்பெற்றாலும் அரசை அசைக்க முடியாது, அரசாங்கத்திற்கு மக்கள் 05 வருட ஆணையை வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையால் சில சவால்கள் ஏற்பட்டுள்ளது, அரசாங்கம் அதனை சமாளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படுவாரென தெரிவிக்கப்படுகின்றதே அது தொடர்பில் உங்கள் கருத்து

என்ன? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாமல் ராஜபக்ஷவுக்கு அவ்வாறானதொரு அதிர்ஷ்டம் இருந்தால் அப்பதவி கிடைக்கும்.

எமது நாட்டில் சிலர் அதிர்ஷ்டம் காரணமாகவே அரசியலுக்கு தெரிவாகியும் வெளியாகியும் உள்ளனர். இதனையும் முன்கூட்டியே தீர்மானிக்கவும் முடியாது. எதிர்பாராத நிலைமைகள் ஏற்படலாம். நாமல் ராஜபக்ஷ, இரண்டாவது முறையாகவும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். சட்டத்தரணியாகவும் கல்வித் தகமை உள்ளவராகவும் அவர் விளங்குகின்றார். எந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் என்பது கூற முடியாது. அடுத்த பிரதமராக ராஜபக்ஷவே உருவாவார் என்பது பற்றியும் கூற முடியாது.அதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Thu, 06/10/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை