நுவரெலியாவிற்கு 50,000; மாத்தளைக்கு 25,000 தடுப்பூசி

நுவரெலியாவிற்கு 50,000; மாத்தளைக்கு 25,000 தடுப்பூசி-COVID19 Vaccine-50000 Dose for Nuwara Eliya 25000 Dose Matale

- ஜூன் 11 இல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் எதிர்வரும் 11ஆம் திகதி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.

மத்திய மாகாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் பிரமுகர்கள்,சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய முக்கிய கூட்டம் மத்திய மாகாண ஆளுனர் லலித் யூ கமகே தலைமையில் ஆளுநர் மாளிகையில் நேற்று (05) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தோட்ட வீடமைப்பு  மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன்  தொண்டமான், மத்திய மாகாணத்தில் வாழுகின்ற தோட்ட தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருகளுக்கும்  கொரோனா தடுபூசி வழங்குமாறு ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

நுவரெலியாவிற்கு 50,000; மாத்தளைக்கு 25,000 தடுப்பூசி-COVID19 Vaccine-50000 Dose for Nuwara Eliya 25000 Dose Matale

மேலும் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டின் அந்நிய செலவாணிக்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மழை,வெயிலையும் பொருட்படுத்தாது உழைத்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தை கோரிக்கையாக முன்வைத்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இந்த கோரிக்கைக்கு  அமைவாக எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி
நுவரெலியா மாவட்டத்திற்கும், மாத்தளை மாவட்டத்திற்கும் கொரோனா தடுபூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுபூசிகளும், மாத்தளை மாவட்டத்திற்கு 25ஆயிரம் தடுபூசிகளுமாக 75 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.

அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் 12 பொது சுகாதார காரியாலய பிரிவில் முதல் ஆறு பொது சுகாதார பிரிவுகளில் கொரோனா தடுப்பூசிகளை முதற்கட்டமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்  அதிகமாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் பொகவந்தலாவ, அம்பகமுவ, லிந்துலை, கொட்டகலை, நுவரெலியா மற்றும் நுவரெலியா மாநகர சபை போன்ற பொதுச் சுகாதார அதிகாரி பிரிவுகளில் உள்ள மக்களுக்கு 50ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது.

இதன்போது  60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் தடுபூசிகள் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜானாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி மலையக தோட்டப்பகுதிகள் அனைத்திற்கும் தடுப்பூசிகள் வழங்கவும், கண்டி, மாத்தளை, உக்குவளை, இரத்தோட்டை ஆகிய பெருந்தோட்ட பகுதிகளுக்கும் தடுப்பூசி வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்தார்.

மேலும் கொவிட் தொற்று நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு அம்பகமுவ உள்ளிட்ட பிரதேசங்களில் கிடைக்கவில்லையென முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. இது பற்றி ஆளுநருடனும், மாவட்டச் செயலாளருடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவுள்ளோம் என்பதாகவும் அவர் கூறினார்.

இந்த விசேட கூட்ட அமர்வில் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அளுத்கமகே, சி.பி. ரத்நாயக்க உள்ளிட்ட  கண்டி, மாத்தளை மாவட்டத்தை பிரதிநிதிபடுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியர்கள் மாவட்ட பிரதேச செயலாளர்கள் இராணுவ உயர் அதிகாரிகள், பிரதி பொலிஸ் மாஅதிபர், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பரத் அருள்சாமி அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(எம்.ஏ. அமீனுல்லா)

Sun, 06/06/2021 - 13:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை