கொவிட்-19: பெருவில் உலகின் அதிக சராசரி உயிரிழப்பு பதிவு

100,000 பேருக்கு 500 பேர் பலி

பெரு நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை மீளாய்வு ஒன்றுக்கு பின்னர் இரட்டிப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சராசரி மக்கள்தொகை அடிப்படையில் உலகில் அதிக கொரோனா உயிரிழப்பு பதிவான நாடாக பெரு இடம்பெற்றிருப்பதாக ஜோன் ஹொப்கின்சன் பல்கலைக்கழக தரவு குறிப்பிட்டுள்ளது.

பெருவில் அதிகாரபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 69,342 ஆக இருந்த நிலையில் தற்போது அது 180,764 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மொத்த மக்கள்தொகை 33 மில்லியனாகும்.

பெரு மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஆலோசனையை அடுத்தே இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் வியோலெடா பெர்முடஸ் தெரிவித்துள்ளார்.

லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பெரு உள்ளது. இதனால் அங்கு சுகாதார கட்டமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதோடு ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

புதிய உயிரிழப்பு எண்ணிக்கையின்படி பெருவில் தலா 100,000 பேருக்கு 500க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் தலா 100,000 பேருக்கு 300 பேர் என அதிக சராசரி உயிரிழப்பு எண்ணிக்கையை கொண்டிருந்த ஹங்கேரியை பெரு முந்தியுள்ளது.

ஒப்பீட்டளவில் பெருவை விடவும் அதிக மக்கள்தொகையை கொண்ட அண்டை நாடான கொலம்பியாவில் கொரோனா தொற்றினால் 88,282 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்றொரு பிராந்திய நாடான பிரேசில் கொரோனா தொற்று உயிரிழப்புகளில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 211 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் 460,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Wed, 06/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை