அட்டாளைச்சேனையில் நேற்று 18 பேருக்கு கொவிட் தொற்றுறுதி

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அகிலன்

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலப்பிரிவில் நேற்று (20) 18 பேர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப்பிரிவில் சனிக்கிழமை (19) 18 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிலிருந்து கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டனர். இது வரையும் எமது சுகாதாரப் பிரிவில் 196 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்டு தற்போது 36 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரையும் 4 பேர் மரணித்துள்ளனர். 64 குடும்பங்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப்பிரிவில் பாலமுனை பிரதேசத்தில் பாலமுனை - 2ம் கிராமப்பிரிவு மற்றும் ஒலுவில் பிரதேசத்தில் ஒலுவில் -4ம் கிராமப்பிரிவில் கொரோனா தொற்றின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் எதிர்வரும் புதன்கிழமை இரவு 10.00மணி வரையும் பயணத்தடை நீக்கப்படுவதால் இக்காலப்பகுதியில் மக்கள் மிக அவதானத்துடன், சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து செயற்பட வேண்டும். தேவையின் நிமிர்த்தம் மாத்திரம் வெளிச் செல்வது மிகச் சிறந்த விடயமாகும்.

இதன் மூலம் உங்களையும் குடும்பத்தவர்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். சந்தைகள், கடைத்தெருக்கள் மற்றும் தேனீர்கடைகளில் கூட்டம் கூட்டமாக நின்று சுகாதாரக் குழுவிடம் அகப்பட்டால் உடனடியாக அவர்களுக்கு அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் எடுக்கப்படுவதுடன் பொலிசாரின் உதவியும் இறுக்கமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் எமது சுகாதாரக் குழுவினர் பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் இணைந்து வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவர். மிக அவசிய விடயங்களுக்காக வெளியில் செல்ல வேண்டி ஏற்பட்டால் முகக் கவசமின்றி செல்ல வேண்டாம். வெளியில் சென்று வீட்டுக்கு வந்ததும் முதலில் நன்கு சவர்காரமிட்டு கைகளைக் கழுவுங்கள்.

பலர் கொரோனா தொற்றுடன் சுகதேகி போன்று உள்ளனர். எது எப்படி இருந்தும் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக நாம் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுவது மிக அத்தியாவசியமாகும்.

கொரோனா 19 தொற்றிலிருந்து நமது பிரதேசமும் நமது நாடும் விடுபட அனைவரும் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மக்களை கேட்டுக் கொள்ளவதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Mon, 06/21/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை