சப்ரகமுவ மாகாணம்; 18 வயதுக்கு மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி

சப்ரகமுவ மாகாணத்தில ஆடைத் தொழிற்சாலைகளில் சேவையாற்றும் 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்தேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய சப்ரகமுவ மாகாணத்தில் ஆடைத் தொழிற்சாலையில்; சேவையாற்றும் 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்தேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

கேகாலை வரக்காபொல துல்கிரிய மாஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு நேற்றையதினம்(15) கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதை கண்காணித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண ஆளுநர்,

கொவிட் 19 தொற்று காரணமாக இன்று அனைத்து நாடுகளினதும் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு ஆடைத் தொழிற்சாலை பெரும் பங்களிப்பை செய்து வருகின்றது. இதன் மூலம் நாட்டில் அதிகளவில் அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ள முடிகிறது. நாடடில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கென அரசாங்கம் பெருந்தொகையான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

நாட்டின் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷமற்றும் கேகாலை மாவட்ட தலைவரும் இராஜாங்க அமைச்சருமான கனக ஹேரத் ஆகியோர் நேரடியாக செயற்பட்டு வருகின்றனர்.

நாடு எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மேலும் தெரிவித்தார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதயகாந்த குணதிலக்க, கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய உட்பட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காவத்தை தினகரன் விசேட நிருபர்

 

Thu, 06/17/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை