புர்கினா பாசோவில் தாக்குதல்: 132 கிராம மக்கள் படுகொலை

வடக்கு புர்கினா பாசோ கிராமம் ஒன்றின் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 132க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அண்மைய ஆண்டுகளில் இடம்பெற்ற மோசமான தாக்குதலாக இது உள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சொல்ஹான் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த பயங்கர தாக்குதலில் வீடுகள் மற்றும் உள்ளூர் சந்தை தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கொல்லப்பட்டவர்களில் ஏழு சிறுவர்கள் இருப்பதோடு மேலும் 40 பேர் காயமடைந்திருப்பதாக அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வீடுகள் மீது தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் பின்னர் ஒருவர் பின் ஒருவராக படுகொலை செய்ய ஆரம்பித்தனர் என்று பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்காதபோதும் அந்நாட்டில் இஸ்லாமியவாதிகளின் இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக நாட்டின் எல்லைப் பிராந்தியங்களில் இவ்வாறான சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் ஐ.நா தலைவர் தமது கவலையை வெளியிட்டுள்ளார். ‘கொடூரமான இந்தத் தாக்குதலை கண்டிப்பதோடு பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுவதில் உறுப்பு நாடுகள் தமது ஆதரவை இரட்டிப்பாக்குவது சர்வதேச சமூகத்தின் அவசர தேவையாக உள்ளது. மனித உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று அன்டோனியோ குட்டரஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதில் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாள் துக்கதினத்தை ஜனாதிபதி ரொச் கபோரே வெளியிட்டிருப்பதோடு, ‘தீய படைகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘குற்றவாளிகளை பாதுகாப்பு படையினர் தற்போது தேடி வருகின்றனர்’ என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் சொல்ஹான் கிராமத்தில் இருந்து 150 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் டடர்யாட் என்ற கிராமத்தில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அண்டை நாடுகளைப் போன்று புர்கினா பாசோவும் பல்வேறு பாதுகாப்பு பிராச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகிறது. அங்கு ஆயுததாரிகள் கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருவதோடு கடத்தல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சி ஆயுதக் குழுக்களுக்கு எதிராக புர்கினா இராணுவம் கடந்த மே மாதம் பரந்த அளவில் தாக்குதல்களை நடத்தியது. எனினும் பாதுகாப்பு படையினரால் வன்முறைகளை தடுக்க முடியாத நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2012 மற்றும் 2013 இல் வடக்கு மாலியின் பெரும் பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியது தொடக்கம் ஆபிரிக்காவின் அரை வரண்ட சஹல் பிராந்தியத்தில் வன்முறை நீடித்து வருகிறது. மாலி, சாத், மொரிடானியா, நைகர் மற்றும் புர்கினா பாசோவில் ஆயுதக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பிரான்ஸ் தனது துருப்புகளை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 06/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை