10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன

மேலும் 2 மில்.தடுப்பூசிகள் 10 தினங்களுக்குள்

சீன உற்பத்தியான சைனோபாம் கொரோனா வைரஸ் தடுப்பூசி மேலும் ஒரு மில்லியன் நேற்று அதிகாலை நாட்டுக்கு கிடைத்துள்ளதாக மருந்துப் பொருட்கள் உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அதிகாலை 5.10 மணியளவில் இலங்கை  விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.869ஆம் இலக்க விமானத்தில் மேற்படி தடுப்பூசி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கைக்கு கிடைத்துள்ள மேற்படி ஒரு மில்லியன் தடுப்பூசிகளையும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை ,மேலும் இரண்டு மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் நாட்டுக்கு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளதுடன் இவ்வருட இறுதிக்குள் நாட்டில் 60 வீதத்திற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசி நாட்டுக்கு கிடைத்துள்ள நிலையில் அது ஒரே தடவையில் நாட்டுக்கு கிடைத்துள்ள பெருந்தொகை தடுப்பூசி என்றும் அரசாங்கம் சீனாவிடமிருந்து விலைக்கு கொள்வனவு செய்துள்ள முதல் தடுப்பூசி தொகை இதுவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் சீன அரசாங்கம் சைனோபாம் தடுப்பூசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியிருந்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 06/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை