10 வாரங்களுக்குள் டெல்டா திரிபு வைரஸ் நாடு முழுவதும் பரவும்

-இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி எச்சரிக்கை

முறையான சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளை பின்பற்றப்படாவிட்டால் 10 வாரங்களுக்குள் நாட்டில் முக்கிய வைரஸ் பரவலாக டெல்டா திரிபு கொரோனா வைரஸ் பரவல் இடம் பிடிப்பதைத் தவிர்க்க முடியாதென கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட  செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

கொரோனா வைரஸ் காரணமாக வயது முதிர்ந்தோரே அதிகளவில் மரணமடைகின்றனர். அதன் காரணமாகவே தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது எல்பா திரிபு கொரோனா வைரஸ் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டோரே பெருமளவில் மரணமடைகின்றனர்.அதனால்தான் அரசாங்கம் தீர்க்கமான தீர்மானமொன்றை மேற்கொண்டு 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதுவரை நாட்டில் 12 கர்ப்பிணித் தாய்மார் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளனர். அதே போன்று டெல்டா திரிபு வைரஸ் பரவல் எச்சரிக்கை சூழ்நிலை உருவாகியுள்ளது.விசேட மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி முழுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றத் தவறினால் மேலும் 10 வாரங்களுக்குள் அதுவே முக்கிய திரிபு வைரஸாக நாட்டில் இடம் பிடிக்கும்.

விசேட மருத்துவ நிபுணரான பேராசிரியர் நிலீகா மலவிகே அது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய எதிரியொன்று உலாவித்திரிவதால் நாம் மிகுந்த சுகாதார பாதுகாப்புடன் செயல்படுவது முக்கியம் என்றும்இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 06/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை