ரூ.1000 சம்பளத்திற்காக 26 கிலோ கொழுந்து பறிக்க உத்தரவு

மஸ்கெலியா, லங்கா தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டுமென்றால் 26 கிலோ கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் கட்டளையிடுகின்றது. அதுமட்டுமல்ல வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்முடியாது. தமது தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியா, லங்கா தோட்டத் தொழிலாளர்கள் ​நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

முன்னர் செய்த வேலையின் அளவுக்கே இந்த சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது, மேலதிகமாக எதையும் செய்ய வேண்டியதில்லை என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு விடுத்தன.

எனினும், ஒரு மாதம் மட்டுமே எமக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.

அதன் பின்னர் உரிய வகையில் சம்பளம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டும் லங்கா தோட்டத் தொழிலாளர்கள், அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டனர்.

"ஆயிரம் ரூபா கிடைப்பதற்கு முன்னர் நாட் சம்பளத்துக்கு பெண்கள் 16 கிலோ கொழுந்து எடுக்க வேண்டும். தற்போது அந்த அளவு 20 கிலோ ஆக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு மூன்று தடவைகள் கொழுந்து அளக்கப்படும். ஒரு தடவைக்கு 2 கிலோ கழிக்கின்றனர். மூன்று தடவைக்கு ஆறு கிலோ கொமிஷ் அடிக்கின்றனர். அப்படியானால் ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு 26 கிலோ பறிக்க வேண்டும்.கொழுந்து இல்லை. 18 கிலோ பறித்தால் கூட அரைநாள் சம்பளம் வழங்கப்படும் நிலை காணப்படுகின்றது.

ஆண் தொழிலாளர்கள் காலை 8 மணிக்குச்சென்று பிற்பகல் ஒரு மணிக்கு வந்துவிடுவர். தற்போது அவர்களுக்கான வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகத்தின் இந்த அணுகுமுறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Thu, 06/17/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை