போர் நிறுத்தத்திற்கான சமிக்ஞை இன்றி தொடர்ந்து உக்கிர மோதல்

காசா மீது நேற்று அதிகாலையிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரி தாக்குதல் நடத்தியதில் குடியிருப்புக் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டதோடு ஊடகவியலாளர் ஒருவர் உட்பட நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

தெற்கு இஸ்ரேலிய நகரங்களை நோக்கி பலஸ்தீன போராளிகள் ரொக்கெட் குண்டுகளை வீசிய நிலையிலேயே இந்த புதிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ரொக்கெட் தாக்குதல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடன் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் இஸ்ரேல் படையினரால் நான்கு பலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கடந்த மே 10 திகதி மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் காசாவில் நேற்றுக் காலை வரை 63 சிறுவர்கள் உட்பட குறைந்தது 219 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,500 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் தரப்பில் இரு சிறுவர்கள் உட்பட பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பதோடு குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த வன்முறைகள் பத்தாவது நாளை எட்டும் நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆளும் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகள் பெரிதாக முன்னேற்றம் இன்றி தோல்வி அடைந்துள்ளன.

இந்த மோதலை நிறுத்த வலியுறுத்தும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் கூட்டு அறிக்கையை வெளியிடுவதில் வீட்டோ அதிகாரம் பெற்ற அமெரிக்கா தொடர்ந்து முட்டுக்கட்டையாக உள்ளது. இந்த அறிவிப்பு பதற்றத்தை தணிக்க உதவாது என்ற அமெரிக்கா இதற்கு நியாயம் கூறி வருகிறது.

புதிய போர் நிறுத்த தீர்மானம் ஒன்று தொடர்பில் இஸ்ரேலின் அண்டை நாடுகளான எகிப்து மற்றும் ஜோர்தானுடன் இணைந்து பணியாற்றி வருவதாக பிரான்ஸ் கூறியுள்ளது. பிரான்ஸின் இந்தத் திட்டத்திற்கு சீனா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

முஹமது தைப் இலக்கு

ஹமாஸ் தளபதிகளின் வீடுகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று வான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் இராணுவத் தளபதி முஹமது தைபை படுகொலை செய்ய பல தடவைகள் முயற்சித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா நகரில் நேற்று இஸ்ரேல் போர் விமானங்கள் 70க்கும் மேற்பட்ட தடவைகள் குண்டு வீசியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவின் தெற்கு நகரான கான் யூனிசில் போராளிகளின் பயிற்சி நிலையம், ஹமாஸின் பாதுகாப்பு வளாகம் மற்றும் விவசாய நிலங்களில் இஸ்ரேல் சுமார் 50 குண்டுகளை வீசி உள்ளது.

‘தான் உறங்கி எழும்போது நாம் இறந்திருப்போம் என்று பயப்படுவதாக எனது நான்கு வயது மகன் கூறுகிறான்’ என காசா நகரைச் சேர்ந்த ஏழு குழந்தைகளின் தாயான 45 வயது ரன்டா அபூ சுல்தான் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

நேற்றுக் காலையும் தொடர்ந்த இஸ்ரேல் தாக்குதல்களில் நிலத்தடி சுரங்கப் பாதைகளை இலக்கு வைத்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

‘இந்த நடவடிக்கைகள் முழுவதிலும் முஹமது தைபை படுகொலை செய்ய முயன்றோம். அவரை கொல்ல பல தடவைகள் நாம் முயற்சித்தோம்’ என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹிதாய் சில்பர்மான் தெரிவித்துள்ளார்.

முஹமது தைப் ஹமாஸ் ஆயுதப் பிரிவான இசதீன் அல் கஸ்ஸாம் படையின் தலைவராவார். 2014 மோதல் உட்பட பல முறை படுகொலை முயற்சிகளில் இருந்து உயிர்தப்பியவராவார். வெளியுலகுக்கு தோன்றாத அவர் எங்கே இருக்கிறார் என்பது ரகசியமாக உள்ளது.

இந்நிலையில் காசாவில் பலஸ்தீன ஆயுதக் குழுக்களுக்கு எதிராக வான் தாக்குதல்களை நிறுத்துவதற்கான சரியான நேரம் பற்றி இஸ்ரேல் மதிப்பிட்டு வருவதாகவும் ஆனால் மேலும் சில நாட்கள் தாக்குதல் நடத்துவது அவசியம் என்றும் இஸ்ரேல் இராணுவ தரப்பு கூறியதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

‘போர் நிறுத்தம் ஒன்றுக்கான சரியான தருணம் எது என்பது பற்றி நாம் ஆராய்ந்து வருகிறோம்’ என்று பெயரை வெளியிடாத இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களின் திறனை குறைக்கும் இலக்கை அடைவது மற்றும் இஸ்ரேலை நோக்கி வீசப்படும் அதன் ரொக்கெட் குண்டுகள் நுழைய முடியாது என்ற செய்தியை ஹமாஸ் புரிந்து கொண்டதா என்பதை இஸ்ரேல் பதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ரொக்கெட் மழை தொடர்கிறது

அஷ்கலோன் மற்றும் அஷ்தோத் நகர் உட்பட தெற்கு இஸ்ரேலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவிலும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. பல்மசின் விமானத் தளத்தின் மீது இரண்டாவது முறையான ரொக்கெட் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. எந்த ஒரு இராணுவத் தளமும் தாக்கப்படவில்லை என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இதில் ரிஹோவொட், நெஸ் சியோனா மற்றும் பல்மசிம் உட்பட மத்திய இஸ்ரேலிலும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை விவசாய நிலத்தில் விழுந்து வெடித்த ரொக்கெட் குண்டில் சிக்கி இரு தாய்லாந்து தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மோதல் ஆரம்பித்தது தொடக்கம் காசாவில் இருந்து 3,750 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டிருப்பதாகவும் அவைகளில் 550 குண்டுகள் இலக்கை எட்டாது காசாவுக்குள்ளேயே விழுந்திருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை நேற்று தெரிவித்தது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு முறையான அயர்ன் டோம் 90 வீதமாக ரொக்கெட் குண்டுகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்திருப்பதாகவும் அது தெரிவித்தது.

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்களிடம் சுமார் 12,000 ரொக்கெட் குண்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகள் இருப்பதாக இந்த மோதலின் ஆரம்பத்தில் இஸ்ரேல் இராணுவம் கணித்திருந்தது.

இஸ்ரேல் நடவடிக்கையால் ஹமாஸ் பல ஆண்டுகள் பின்தங்கி இருப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். எதிர்பாராத இழப்பை அது சந்தித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் பலஸ்தீன போராளிகள் தொடர்ந்து தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை இஸ்ரேலுக்கு நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

மறுபுறம் இஸ்ரேலுக்குள்ளும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்திலும் பதற்ற சூழல் நீடிப்பது இஸ்ரேலுக்கு மற்றுமொரு பிரச்சினையாக மாறியுள்ளது.

இதேவேளை ஜோர்தான் நாட்டில் இருந்து இஸ்ரேலில் உள்ள கரேம் சலோன் வழியாக காசாவுக்கு நிவாரணப்பொருட்கள் செல்வது வழக்கம். அந்த பாதையை இஸ்ரேல் அடைத்துள்ளது.

இதன் காரணமாக நிவாரண பொருட்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொருட்கள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் முக்கிய பாதையை அடைத்து விட்டதால் மக்கள் இன்னும் மோசமாக பாதிப்பை சந்திக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

 

இராஜதந்திர இழுபறி

நியூயோர்க்கில் கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபை மீண்டும் ஒருமுறை கூடியபோதும் இணக்கம் ஒன்றை எட்ட தவறியுள்ளது.

மறுபுறம் எகிப்து தலைவர் அப்துல் பத்தாஹ் அல் சிசி மற்றும் ஜோர்தான் மன்னர் இரண்டாவது அப்துல்லாவுடனான வீடியோ மாநாடு ஒன்றின்போது தீர்மானம் ஒன்று வகுக்கப்பட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புச் சபையில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதில் தோல்வி கண்டிருப்பது வெட்ககரமானது என்று ஐ.நாவின் பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூரி தெரிவித்துள்ளார்.

மோதலை முடிவுக்குக் கொண்டுவரும்படி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிம் மற்றும் ஏனைய சக்திகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதேவேளை இஸ்ரேல் தொடர்பில் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் யூத எதிர்ப்பு கருத்தை வெளியிட்டதாக அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டை துருக்கி நேற்று மறுத்தது.

பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிடுவதாக எர்துவான் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

Thu, 05/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை