இஸ்ரேலில் ஆட்சி அமைக்கும் நெதன்யாகு முயற்சி தோல்வி

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு புதிய அரசு ஒன்றை அமைப்பதற்கு வழங்கப்பட்ட காலக்கெடு கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்ற நான்காவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறும் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு நெதன்யாகு கடந்த 28 நாட்களாக முயன்றார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு மற்றொரு அரசியல் தலைவருக்கு ஜனாதிபதி ரியூவன் ரிவ்லின் அழைப்பு விடுக்கவுள்ளார்.

எனினும் இஸ்ரேல் மற்றொரு பொதுத் தேர்தலுக்கு செல்லும் நெருக்கடி தற்போது அதிகரித்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற தேர்தலில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில், இஸ்ரேலில் நீண்ட கால தலைவராக இருந்து சாதனை படைத்திருக்கும் நெதன்யாகுவுக்கு இது பெரும் பின்னடைவாக உள்ளது.

இதன்படி புதிய அரசு ஒன்றை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரிவ்லின் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 28 நாட்கள் அவகாசம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தலில் நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சிக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்த மையவாத யெஷ் அடிட் கட்சியின் தலைவர் யெயிர் லபிட்டுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் கூட்டணி ஒன்றை அமைப்பதில் சிந்தனை அடிப்படையில் பிளவுகளை சந்தித்துள்ள கட்சிகளை ஒன்று சேர்ப்பதில் அவர் பெரும் சவாலை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது.

இந்த அபேட்சகரும் அரசொன்றை அமைப்பதில் தோல்வி கண்டால், பிரதமர் ஒருவரை தேர்வு செய்வதற்கு பாராளுமன்றத்தை ஜனாதிபதி கோருவார். அதுவும் முடியாத பட்சத்தில் இஸ்ரேல் மீண்டும் ஒரு முறை பொதுத் தேர்தலுக்கு செல்லும் நிலை உள்ளது. பிரதமர் நெதன்யாகு ஊழல் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையிலேயே இஸ்ரேலில் அரசியல் இழுபறி நீடித்து வருகிறது. அந்தக் குற்றச்சாட்டுகளை நெதன்யாகு மறுத்து வருகிறார். எனினும் குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில் அவர் தொடர்ந்து பதவியில் இருக்கக் கூடாது என்று அவரது போட்டியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

1996 தொடக்கம் ஐந்து அரசுகளுக்கு நெதன்யாகு தலைமை வகித்துள்ளார். கடைசியாக அவர் பிரதான எதிர்க்கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்த நிலையில் கடந்த டிசம்பரில் அது முறிந்தது. அதனைத் தொடர்ந்தே அண்மைய தேர்தல் இடம்பெற்றது.

Thu, 05/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை