முல்லைத்தீவு கடற்கரை பகுதிகளில் மணல் அகழ்வு

முல்லைத்தீவு கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் தொடர்கின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலாவத்தை மேற்கு, உப்புமாவெளி ஆகிய இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்கின்ற மணல் அகழ்வினால் கடல் நீர் உட்புகும் அபாயம் எழுந்துள்ளது. இயற்கையான மண் மேடுகள் அழிக்கப்பட்டு தென்னைகள் நடுகை செய்வதற்கென காரணங்கள் கூறப்பட்டு பெருமளவு மணல் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

இது தொடர்பாக கரைதுறைபற்று பிரதேச செயலகத்திலும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு மணல் அகழ்வை நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் மணல் அகழ்வு தடுத்து நிறுத்தப்படவில்லை. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புகளின் போது முல்லைத்தீவு திருகோணமலை வீதிக்கு கடல் நீர் பரவக் கூடிய அபாயம் தற்போது காணப்படுகின்றது. மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு குறூப் நிருபர்

Fri, 05/07/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை