பிசிஆர் பரிசோதனைகள் மேலும் அதிகரிக்கப்படும்

- எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு வைபவங்கள், உற்சவங்களுக்கு முற்றாக தடை விதிப்பு

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை இனங்காணும் பிசிஆர் பரிசோதனைகளை மேலும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க நேற்று முன்தினம் ஒரே நாளில் 23 ஆயிரத்து 700 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கையானது இதுவரை ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிஉச்ச பிசிஆர் பரிசோதனையாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 20 லட்சத்திற்கு அதிகமானவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, என்ரிஜன் பரிசோதனை மூலமான நான்காயிரம் மாதிரிகள் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்திற்கு கொரோனா பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை வழங்குவதற்காக ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை தயார் படுத்தப்பட்டுள்ளது. அங்கு தீவிர சிகிச்சைகளை மேற் கொள்ளும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அதனை பார்வையிடுவதற்காக அங்கு நேரில் சென்றுள்ள சுகாதார அமைச்சர், தீவிர சிகிச்சைப் பிரிவை முன்னெடுத்துச் செல்வதற்காக தேவைப்படும் 30 டாக்டர்கள் 80 தாதிமார் மற்றும் 25 கனிஷ்ட பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோரை விரைவாக அந்த ஆஸ்பத்திரியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தார். அது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவை பணிப்பாளருக்கும் அமைச்சர் உடனடி பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்காக மூன்று தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 24 தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் மற்றும் 12 பாதுகாப்பான கட்டில்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்கள் வசதிகளையும் உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, திருமணங்கள் உள்ளிட்ட அனைத்து உற்சவங்களும் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தடையை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 05/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை