அமெரிக்க படைகளின் பாதுகாப்பிற்கு மேலதிக போர் விமானங்கள் விரைவு

ஆப்கானில் இருந்து வாபஸ் பெறும்

ஆப்கானில் இருந்து வெளியேறும் அமெரிக்க மற்றும் கூட்டுப்படைகளை பாதுகாப்பதற்கு மேலதிக இராணுவ ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பவுள்ளது.

துருப்புகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் பாதுகாப்பிற்கு குண்டு வீசும் விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ மற்றும் அமெரிக்க படைகள் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானில் நிலைகொண்டுள்ளன. ஆப்கானின் படையெடுப்புக்கு காரணமான செப்டெம்பர் 11 தாக்குதலின் 20 ஆண்டு நினைவு தினமான எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் இருந்து முழுமையாக வெளியேறும் அறிவிப்பை அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.

எனினும் ஆப்கானில் வன்முறைகள் அதிகரித்திருக்கும் சூழலிலேயே அமெரிக்க துருப்புகள் அங்கிருந்து வெளியேறவுள்ளன.

சர்வதேச துருப்புகள் மீதான தாக்குதலை நிறுத்தும் ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கும் கடப்பாடு தொடர்ந்து தமக்கு இல்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் தலிபான்களுடன் கடந்த ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் வெளிநாட்டுப் படைகள் மே 1 ஆம் திகதியே வெளியேறுவதாக காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனை ஒட்டியே தலிபான்கள் வெளிநாட்டு படைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தியது.

இந்நிலையில் வெளியேறும் 2,500 அமெரிக்க இராணுவப் படையினர் மற்றும் 16,000 சிவில் ஒப்பந்ததாரர்களின் பாதுகாப்பிற்காக நீண்ட தூரம் குண்டு வீசும் ஆறு பி-52 விமானங்கள் மற்றும் 12, எப்-18 போர் விமானங்கள் நிலைநிறுத்தப்படும் என்று கூட்டுப்படை பணிக்குழுத் தலைவர் மார்க் மில்லி தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் ஆப்கான் அரசுக்கு எதிராக நாள்தோறும் 80 தொடக்கம் 120 தாக்குதல்களை நடத்தியபோதும் மே 1 ஆம் திகதி வாபஸ் பெறும் காலம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் அமெரிக்க மற்றும் கூட்டுப்படைகள் மீது எந்த தாக்குதலும் இடம்பெறவில்லை என்று ஜெனரல் மில்லி சுட்டிக்காட்டினார்.

Sat, 05/08/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை