கட்டுப்பாட்டை இழந்துள்ள சீன ரொக்கெட் பூமியில் விழ வாய்ப்பு

கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட் இந்த வாரத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையவிருப்பது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் போன்று தங்களுக்கென்று சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில் லாங் மார்ச் 5–பி என்றழைக்கப்படும் 100 அடி உயர இராட்சத ரொக்கெட்டை சீனா விண்ணில் செலுத்தியது.

தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த ரொக்கெட், மணிக்கு 27,600 கிலோமீற்றர் வேகத்தில், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

21 தொன் எடையிலான இந்த ரொக்கெட், வரும் ஒன்பதாம் திகதி வாக்கில் பல பாகங்களாக உடைந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த உடைந்த பாகங்கள் பூமிக்கு திரும்பும் புள்ளி எது என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில் ‘மேற்குல நாடுகளின் மிகைப்படுத்தல்களுக்கு அச்சப்படத் தேவையில்லை’ என்று சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

‘வளிமண்டலத்திற்குள் நுழையும்போதும் பெரும்பாலான இடிபாடுகள் எரிந்து அழிந்து விடும். மிகச் சிறிய பாகங்களே தரையில் விழ வாய்ப்பு உள்ளது. அவை மனித செயற்பாடுகள் அற்ற பகுதி அல்லது கடலில் விழ சாத்தியம் உள்ளது’ என்று ஏரோஸ்பேஸ் நொலேட்ஜ் சஞ்சிகையின் தலைமை ஆசிரியர் வங் யான் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ரொக்கெட் இது போன்று பூமியில் விழுவது புதிதல்ல. கடந்த ஆண்டு மே மாதம், சீனாவின் லாங் மார்ச் 5–பி ரொக்கெட் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து வடமேற்கு ஆபிரிக்காவில் மொரித்தானிய கடல் பகுதியில் விழுந்தது.

Fri, 05/07/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை