பெலாரஸ் விமானங்களுக்கு ஐரோப்பாவில் 'வான்' தடை

பெலாரஸ் தலைநகருக்கு விமானம் ஒன்று திசை திருப்பப்பட்டு அதில் இருந்த ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து பெலாரஸ் விமானங்கள் ஐரோப்பிய வான் பரப்பில் பறப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் தலைவர்களும் கடந்த திங்கட்கிழமை பிரசல்சில் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இந்தத் தடை கொண்டுவரப்பட்டுள்ளது. பெலாரஸ் மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கவும் அந்த சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரேக்கத்தில் இருந்து லிதுவேனியாவை நோக்கி பயணித்த அந்த விமானத்தில் குண்டு இருப்பதாகக் குறிப்பிட்டே பெலாரஸ் தலைநகரில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விமானத்தில் இருந்த அரச எதிர்ப்பாளரான 26 வயது ரோமன் ப்ரொடவிச் என்ற ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விமானத்தை பெலாரஸ் கடத்தியதாக மேற்குலக நாடுகள் குற்றம்சாட்டின.

கைதுசெய்யப்பட்ட ப்ரொடவிச்சின் வீடியோ பதிவு ஒன்றை பெலாரஸ் நிர்வாகம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது. அதில் தாம் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும் பெலாரஸ் அரசு தம்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் அழுத்தத்திற்கு மத்தியில் இந்த வாக்குமூலத்தை வெளியிட்டிருப்பதாக பெலாரஸின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் உட்பட செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வான் தடையை அடுத்து பெலாரஸ் வான்பரப்பில் இருந்து விமானங்களை வேறு பாதைகளில் திசைதிருப்பும் நடவடிக்கையை பிரதான ஐரோப்பிய விமான சேவைகள் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.

பெலாரஸ் அரச விமான சேவைக்கான அனுமதியை பிரிட்டன் இடைநிறுத்தி இருப்பதோடு உறுப்பு நாடுகள் இதே போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளும்படி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Wed, 05/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை