வடமாகாணத்தில் கொரோனா தொற்றுக்களை எதிர்கொள்வதற்கு சுகாதாரத் துறையினர் தயார்

- மேலதிக சிகிச்சை நிலையங்களும் நிறுவப்படும்

வட மாகாணத்தில், கொரோனா நோய்த் தொற்று எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கும் பட்சத்தில், கோப்பாய் சிகிச்சை நிலையம்,கிளிநொச்சி சிகிச்சை நிலையங்களூடாக 600 நபர்களுக்கு முதற்கட்டமாக சிகிச்சை வழங்ககூடியதாக இருக்குமென வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான நிலைமைகளைத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று (04) யாழ் பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவித்த போதே வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் இதுபற்றிக் கூறினார்.

மேலும் அவர் தெரிவித்தாவது:வடமாகாணத்தில் நேற்று 404 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

வடமாகாணத்தில் சுகாதார பணியாளர்களாக கடமையாற்றும் 6648 நபர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் எற்றும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இவற்றில் நேற்று வரையான காலப்பகுதிக்குள் 1385 நபர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று, வடமாகாணத்திலும் பரவக்கூடிய நிலை எற்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கு வடமாகாண வைத்தியசாலைகள் தயார் நிலையிலுள்ளன.

கோப்பாய் சிகிச்சை நிலையம், கிளிநொச்சியில் சிகிச்சை நிலையங்களென,வட மாகாணத்தில் இரண்டு தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்கள் உள்ளன. இவைகளில் 600 நபர்களுக்கு சிகிச்சை வழங்க முடியும். இதற்கு மேலதிகமாக,வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் புதிய சிகிச்சை நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொற்று இளவயதினரை வேகமாக தாக்குகின்றது.இதனால்,மாகாணத்திலுள்ள சுகாதார நிலையங்களில் புதிய விடுதிகள் அமைப்பதற்கான எற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Wed, 05/05/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை