மட்டு. மாவட்டத்திற்குள் உள்நுழையும் பிரதேசங்களில் அன்டிஜன் பரிசோதனை

- மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்

மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பிரவேசிப்போருக்கு மாவட்டத்தின் உள் நுழையும் பிரதேசங்களிலேயே அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென, மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்திற்கான கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் செவ்வாய்கிழமை (11) அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், மாகாண மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில் செயலணியில் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்,

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் ஈடுபடும் போது அனாவசிய தேவைகளுக்காக பயணிப்பார்களேயானால் அவர்களை இனம்கண்டு மீண்டும் திருப்பியனுப்பப்படுவார்கள் என்றும், ரமழான் கொண்டாட்டத்திற்காக ஏனைய மாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு மாவட்டத்தின் உள் நுழையும் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் எழுமாறாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

கொவிட் நோயாளர்களை பராமரிப்பதற்கான இடவசதியினை மேற்கொள்ளும் பொருட்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பயில்கின்ற விடுதி வசதியை இதற்காக பெறுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், அதனை ஆராய்வதற்காக இன்று ஒரு குழு நியமிக்கப்பட்டு அவர்கள் அதை நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கையினை சமர்ப்பிப்பார்களெனவும், அதன் பின்னரே அந்த விடுதியை பாரமெடுப்பதா என்பது தொடர்பான தீர்மானம் எட்டப்படுமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. மாவட்டத்திற்குள் ஏனைய மாவட்டங்களில் இருந்து உள் நுழைவதாயின் ஏழு வழிகள் காணப்படுகின்றன, அந்த 7 இடங்களிலும் உடனடியாக பொலிஸாரையும் இராணுவத்தினரையும் பயன்படுத்தி சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும், இதில் மாவட்டத்திற்குள் உள் நுழைபவர்களையும் வெளிச்செல்பவர்களையும் சோதனையிடவுள்ளதுடன், பொருளாதார மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்களை மாத்திரமே போக்குவரத்து மேற்கொள்வதற்கு அனுமதிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

பொதுமக்கள் அநாவசியமாக மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

(வெல்லாவெளி தினகரன் நிருபர்)

Thu, 05/13/2021 - 18:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை