கொரோனா மூலத்தை கண்டுபிடிக்க அமெரிக்க ஜனாதிபதி பைடன் கெடு

சீன ஆய்வுகூடத்தில் இருந்து கொவிட்-19 தொற்று தோன்றியதான கூற்று உட்பட, இந்த வைரஸ் தொற்றின் மூலம் பற்றிய விசாரணையை இரட்டிப்பாக்கும்படி உளவுத் துறை அதிகாரிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த தொற்று ஆய்வுகூட விபத்தில் இருந்து தோன்றியதா அல்லது தொற்று உள்ள விலங்கில் இருந்து மனிதனுக்கு பரவியதா என்பதில் அமெரிக்க உளவுத்துறை பிளவுபட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

90 நாட்களுக்குள் இது பற்றிய அறிக்கையை தமக்க சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்தக் குழுக்களுக்கு பைடன் கெடு விதித்துள்ளார்.

ஆய்வுகூடத்தில் இருந்து தோன்றியதாக கூறப்படும் கூற்றை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

‘மேலோட்டமான பிரசாரங்கள் மற்றும் மாறி மாறி இடம்பெறும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நீடிப்பதோடு ஆய்வுகூட கசிவு என்ற இருண்மை கோட்பாடு மீண்டும் எழுப்பப்படுகிறது’ என்று அமெரிக்காவுக்கான சீன தூதரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சீன நகரான வூஹானில் 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது தொடக்கம் இதுவரை அந்த நோய்த் தொற்றினால் உலகெங்கும் 168 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு 3.5 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆரம்ப கொவிட் தொற்று சம்பவங்கள் வூஹான் நகர கடலுணவுச் சந்தையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதனுக்கு தொற்றியிருக்கலாம் என்ற கோட்பாடு விஞ்ஞானிகளிடையே வலுத்தது. ஆனால் இந்த வைரஸ் ஆய்வுகூடத்தில் இருந்து பரவியதற்கு ஆதாரங்கள் வலுத்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் அண்மைய நாட்களில் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. தற்செயலாக இந்த வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஆனால், இந்த செய்திகளில் இடம்பெற்ற தகவல்களை கண்டித்துள்ள சீனா, அந்த வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸின் மூலம் தொடர்பாக ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடனேயே தொற்று பரவிய விலங்கிடம் இருந்து வைரஸ் மனிதனுக்கு பரவியதா அல்லது அது ஒரு ஆய்வக சம்பவமா என்பதை விளக்குமாறு அறிக்கை கோரியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை தற்போது அவருக்கு அளிக்கப்பட்டதன் பின்னணியிலேயே தற்போது கூடுதலாக விரிவான அறிக்கையை ஜனாதிபதி கோரியுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘இன்றைய நிலவரப்படி, இரு சாத்தியமான வைரஸ் மூலம் குறித்து அமெரிக்க உளவு சமூகம் தமது கருத்துகளை வழங்கியிருந்தாலும், தீர்க்கமான முடிவை அவை எட்டவில்லை’ என்று ஜோ பைடன் கூறியுள்ளார். இந்த நிலையில்தான் உளவு அமைப்புகளிடம் தங்களுடைய வைரஸ் மூலத்தை கண்டறியும் முயற்சியை இரட்டிப்பாக்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் நாட்டின் பாராளுமன்றத்திடம் அவ்வப்போது தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஒத்த கருத்துடைய கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா பணியாற்றும் என்றும் இதில் முழுமையாகவும் வெளிப்படையாகவும், தரவுகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் சர்வதேச புலனாய்வுக்கும் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஜோ பைடன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், சீன ஆய்வாளர்களுடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், ஆய்வகங்களில் இருந்து வைரஸ் கசிந்திருக்கலாம் என்பதற்கான சாத்தியம் முழுமையாக இல்லை என்று கூறப்பட்டிருந்தது. அதே சமயம், இந்த விவகாரத்தில் மேலும் ஆய்வு தேவை என்று உலக சுகாதார அமைப்பு அப்போது கூறியது.

இந்த நிலையில், அமெரிக்க உளவு வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிவந்த சமீபத்திய தகவல்களின்படி, சீனாவில் முதலாவதாக புதிய வைரஸ் கண்டறியப்பட்டதை அந்நாடு ஏற்றுக் கொள்ளும் முன்னரே, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்று பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை வூஹானின் வைரோலஜி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது, முதன்மை சுகாதார ஆலோசகராக இருந்த அன்டனி பௌட்சி, விலங்குகளிடம் இருந்துதான் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்க வேண்டும் என்று கூறினார். இந்த மாதம் அவர், கொவிட்-19 வைரஸ் இயற்கையாக உருவானது என இனியும் நம்பவில்லை என்று கூறினார்.

கொரோனா வைரஸின் மூலம் தொடர்பரான விசாரணை, வெளிப்படையாக இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் சேவியர் பெக்கெர்ரா கருத்து வெளியிட்ட சில நாட்களில் ஜனாதிபதி பைடனின் கண்டிப்பான உத்தரவு வெளிவந்துள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.

Fri, 05/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை