சீன விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறக்கம்

சீன விண்கலத்தின் ரோவர் (ஆய்வு வாகனம்) செவ்வாய் கிரகத்தில் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

இதன்மூலம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக செவ்வாயில் ரோவரை தரையிறக்கிய 2ஆவது நாடு எனும் பெருமையை சீனா பெற்றுள்ளது.

ஜுரோங் என்ற அந்த ரோவருடன் தியான்வென்–1 விண்கலம் கடந்த ஆண்டு ஜூலையில் செலுத்தப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைக்குள் விண்கலம் நுழைந்தது.

இந்த நிலையில், விண்கலத்திலிருந்து பிரிந்த ஆய்வு வாகனம் பெய்ஜிங் நேரப்படி சனிக்கிழமை காலை 7.18 மணிக்கு பரந்த நிலப்பரப்பான 'உடோபியா பிளானிடியா' என்ற பகுதியில் தரையிறங்கியதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜுரோங் ரோவரின் சூரியசக்தி தகடும், அண்டனாவும் விரிவடைய 17 நிமிடங்கள் ஆனது. அதன் பின்னர் 32 கோடி கி.மீ. தொலைவில் புவியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை அனுப்பியது. சுரோங் ரோவர் நகர்ந்து ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் முன்னர், கிரகத்தின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும். சீன நெருப்புக் கடவுளான 'ஜுரோங்' பெயரிலான இந்த ரோவர் உயர் தெளிவுத் திறன் கொண்ட நிலப்பரப்பு கேமரா உள்ளிட்ட 6 அறிவியல் கருவிகளைக் கொண்டுள்ளது.

செவ்வாய் கிரக தரைப்பரப்பின் மண் மற்றும் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் ஜுரோங், தரைப்பரப்பில் தண்ணீர் உள்ளதா, அங்கு முன்னர் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொள்ளும்.

 

Mon, 05/17/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை