உயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி; முகநூலில் கம்பவாரிதி ஜெயராஜுக்கு நேர்ந்த கதி

− நடராஜா குருபரன் (முகநூல் பதிவிலிருந்து)

1987களில் மகா வித்துவான் வீரமணி ஐயர் – 2021ல் கம்பவாரிதி ஜெயராஜ் – தாமே தம் மரணச் செய்தியை கேட்கும் வரம் பெற்றவர்கள்.

கம்பவாரிதி ஜெயராஜ் சுக நலத்துடன் ஆரோக்கியமாக உயிருடன் இருக்கும் போது முகநூலில் அவருக்கு ஒருவர் அஞ்சலி செலுத்திவிட்டார்.

உடனே அது சரியான தகவலா?, தவறானதா? வதந்தியா? என்றெல்லாம் ஆராயாது போகிற போக்கில் அழுகை குறியீடு இடுபவர்களும், அதனை பகிர்கிறவர்களுமாக கடந்த சில நாட்கள் முகநூல் ஒரே அதகளமாக இருந்தது.
இந்தப் பதிவை பார்த்த போது 1987 – 1989 இந்திய அமைதிப்படைக்கால ஞாபகம் நினைவில் வந்தது. அப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் (EPRLF) வடக்கு கிழக்கில் கோலோச்சிய காலம். ஒவ்வொரு நாள் விடிகின்ற போதும், பெரும் சுவர்களில் ஈழச் செய்திகள் என முக்கிய தலைப்புச் செய்திகளை அவர்கள் பதிவிடுவார்கள்.

அப்படி ஒரு நாள் காலை, யாழ்ப்பாணத்தின் முக்கிய பெரும் சுவர்களில் புகழ்பூத்த மகா வித்துவான் இணுவில் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர் காலமானார் என்ற செய்தியை ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியிட்டு இருந்தது.அன்றைய காலம் சமூக வலைத்தளங்கள், கையடக்கத் தொலைபேசிகள் நேரடி தொலைபேசிகள் மக்களை கட்டுப்படுத்தியிருக்கவில்லை. தவிரவும் இந்திய அமைத்திப்படையின் கட்டப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்ததனால் தகவல் பரிமாற்றமும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.

அதனால் சுவர்களை பார்த்த, ஐயரைத் தெரிந்தவர்கள் அவரின் வீட்டை முற்றுகையிட்டனர். தனது மரணச் செய்தியை அறிந்து துக்கம் விசாரிக்க சென்றவர்களை அவரே வரவேற்று, பதில் அளிக்கும் பாக்கியத்தை அன்று வீரமணி ஐயாவுக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் கொடுத்திருந்தது.

அவ்வாறான பாக்கியத்தை கம்பவாரிதி ஜெயராஜூக்கு இப்போ சில முகநூல் பிரியர்கள் வழங்கியிருக்கிறார்கள். ஒரு சில நிமிடங்களை செலவிட்டு வாசிப்பதற்கு கூட பொறுமை இல்லாதவர்களாக, இயந்திர மனிதர்களாக மாறிவருகிறோம் என்பது மிகப் பெரும் அப்பத்தமே.

Mon, 05/17/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை