Header Ads

நாட்டின் சவாலான சந்தர்ப்பங்களில் மக்கள் வங்கியின் பங்களிப்பு மகத்தானது

புதிய தலைமையக கட்டட அடிக்கல் நாட்டல் வைபவத்தில் பிரதமர்

இலங்கை சமூகம் இதுவரை முகங்கொடுக்காத வகையிலான சவால்களை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் தேசிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்த மக்கள் வங்கியை நாட்டு மக்கள் நேசிக்கின்றனர் என நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று (28) அலரி மாளிகையில் தெரிவித்தார்.

மக்கள் வங்கியின் புதிய தலைமை அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு காணொளி தொழில்நுட்பம் ஊடாக அலரி மாளிகையிலிருந்து கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

44 ஆண்டுகளாக சித்தம்பலம் கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகம் மக்கள் வங்கியின் தலைமை அலுவலகமாக காணப்பட்ட நிலையில், தற்போது 100 வீதம் பசுமை கருத்திட்டத்தின் கீழ் 03 நிலக்கீழ் தளங்களையும் 23 மாடிகளையும் கொண்ட புதிய தலைமை அலுவலகம் நவீன வசதிகளுடன் கூடியதாக கொழும்பு இப்பன்வல சந்திக்கு அருகே நிர்மாணப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நவீன தொழில்நுட்பம் ஊடாக அதன் நினைவு பலகையை திறந்து வைத்தார்.

இதன்போது பிரதமர் தெரிவித்ததாவது,

மிக மோசமான யுத்தத்திற்கு முகங்கொடுத்திருந்த சந்தர்ப்பத்திலும், நாம் நாட்டில் துறைமுகம், விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை போன்றவற்றை அமைத்தோம்.

அதனால் இவ்வாறான சவால் மிகுந்த சந்தர்ப்பங்களிலும் பணிகளை இடைநிறுத்தாது முன்னெடுத்து செல்ல நாம் நன்கு பழக்கப்பட்டுள்ளோம்.

ஒரு பொறுப்புள்ள அரச வங்கியாக, மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நிதி வசதிகளை வழங்குவதில் மட்டுப்படுத்தப்படவில்லை.

நாட்டின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு அளித்த பங்களிப்பு அற்பமானது அல்ல.

ஒரு அரச வங்கியாக, ஏற்றுமதி, கல்வி, சுகாதாரம், அதிவேக நெடுஞ்சாலைகள், வீதி, சுற்றுலா மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் நிதி உதவி வழங்குவதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் வங்கி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், சுனாமி, வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற இயற்கை பேரழிவுகளின் காலத்திலும், முப்பது ஆண்டுகால போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கும் இவ்வங்கி உதவியுள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு, கொவிட் -19 நெருக்கடி காரணமாக இலங்கை சமூகம் இதுவரை முகங்கொடுத்திராத வகையிலான சவால்களை எதிர்கொண்டபோது, தேசிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மக்கள் வங்கி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.

மக்கள் வங்கி தற்போது டிஜிட்டல் அரங்கில் நுழைந்து நாட்டில் வங்கியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இந்த மாபெரும் நிதி நிறுவனம் ஒரு அதிநவீன கட்டிடத்திற்குள் செல்ல முடிவெடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அந்நேரத்தில் மக்கள் வங்கி விளம்பரம் செய்ய முயற்சித்த விளம்பரம் எனக்கு நினைவிருக்கிறது. மக்கள் மனமறிந்த வங்கி மக்கள் வங்கி என்று கூறப்பட்டது.

மக்கள் இன்னும் அந்த வார்த்தையை விரும்புகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மக்கள் வங்கியின் பணிகள் அனைத்து வகையிலும் வெற்றிபெற வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன் என்று பிரதமர் கூறினார்.

நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், ஷெஹான் சேமசிங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன், மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, தலைமை நிர்வாக அதிகாரி ரஞ்சித் கொடிதுவக்கு உள்ளிட்ட மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவினர் கலந்து கொண்டனர்.

Sat, 05/29/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.