மட்டு. நகரில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த அனைத்து கடைகளும் பூட்டு

- மட்டு. மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன்
- அனுமதியளிக்கப்பட்டுள்ள கடைகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கொவிட்-19 தொற்று மற்றும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு நகரில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த அனைத்துக் கடைகளும் நேற்று (19) பூட்டப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் கொவிட்-19 மற்றும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் முன்களப் பணியாளர்களின் ஆலோசனைக்கிணங்க மட்டக்களப்பு நகரில் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த அனைத்து கடைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டப்பட வேண்டும் என மட்டு. மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் நேற்று முன்தினம் (18) தெரிவித்ததற்கிணங்க கடைகள் மூடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட கொவிட்-19 கட்டுப்பாட்டுச் செயலணியினால் மாநகரசபைக்குட்பட்ட சின்ன ஊறணி, திருச் செந்தூர், பாலமீன்மடு, பூநொச்சிமுனை மற்றும் கல்லடி வேலூர் கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திறப்பதற்காக அனுமதியளிக்கப்பட்டுள்ள கடைகள் யாவற்றிலும் உள்ள ஊழியர்கள் மற்றும் சேவைகளை நாடிவரும் வாடிக்கையாளர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படாதவிடத்து அத்தகைய கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

இந்நிலையில் நகரின் ஏனைய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்கள் மற்றும் வெளியிடங்களில் இருந்து நகரை நாடி வரும் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மருந்தகங்கள், மரக்கறி கடைகள், பழக்கடைகள், மளிகைச் சாமான்கள், வெதுப்பகங்கள் மற்றும் பார்சல்களில் உணவுகளை வழங்கக்கூடிய சாப்பாட்டுக்கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டிருந்தன.

பொதுமக்கள் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் செயல்படுவதன் காரணமாக நகரில் தொற்றாளர்கள் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளமை கவலையளிக்கின்றது. பொலிசார், பாதுகாப்புப் படையினர், சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களின் ஆலோசனைக்கமைவாக செயற்படுவதன் மூலம் அரசானது முன்னெடுத்துள்ள கொவிட் 19 ஒழிப்புக்கு உதவலாம் எனத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு விசேட நிருபர்

Thu, 05/20/2021 - 11:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை