அச்சுறுத்தலுக்காக முடங்கியிருக்க முடியாது; வளங்களை ஒருங்கிணைக்க வேண்டும்

- அமைச்சர் டக்ளஸ்

எமது பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எம்மை நோக்கி வருகின்ற அச்சுறுத்தல்களில் இருந்து எம்மையும் எம்சார்ந்தவர்களையும் பாதுகாப்பது தொடர்பான அறிவுசார் சிந்தனைகளோடு முன்னோக்கி நகர வேண்டுமே தவிர, முடங்கி இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூநகரி பிரதேச செயலகத்தில் நேற்று(02.05.2021) இடம்பெற்ற கடற்றொழிலாளர் சார் கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு பூநகரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கடற்றொழில்சார் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. குறித்த கலந்துரையாடலில்,

கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிகள் கலந்து கொண்டு தமது தேவைகள் மற்றும் சீர்செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தனர்.

குறிப்பாக, இரணைதீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை ஏற்றுமதிக் கிராமம், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏனைய சங்கங்களினாலும் கடலட்டை பண்ணை அமைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக கவனம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், கடலட்டைப் பண்ணை அமைப்பதற்குப் பொருத்தமான இடங்களை அடையாளம் செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

அதேபோன்று, கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இன்னோரன்ன தேவைகள் தொடர்பாக கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mon, 05/03/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை