வழமைக்கு திரும்பியது அம்பாறை மாவட்டம்

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை 13 ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நேற்று (17) திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.

இதனையடுத்து அம்பாறை மாவட்டத்தின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.

பொதுமக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி சுகாதார சட்டவிதிமுறைகளுக்கு அமைய தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மூன்று நாட்களாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளும் நடைபெற்றன.

உள்ளூர் மரக்கறி வகைகள் சந்தையில் குறைந்த விலையில் விற்கப்பட்ட போதிலும் மலைநாட்டு மரக்கறி வகைகள் கூடிய விலையில் விற்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து விசேட கண்காணிப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த போக்குவரத்து மற்றும் ஒன்றுகூடல்களை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்வதுடன் சுகாதார விதிமுறைகளை மீறுவோர் மீது நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

பொலிசாரும், இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

உள்ளூர் போக்குவரத்துகள் சுமூகமாக இடம்பெற்றது.

மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை சுகாதார நடைமுறைகைளைப் பின்பற்றி சமூக இடைவெளியைப் பேணி கொள்வனவு செய்தனர்.

(பெரியநீலாவணை விசேட, ஒலுவில் விசேட நிருபர்கள்)

Tue, 05/18/2021 - 11:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை