இந்தியாவின் அண்டை நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் உச்சம்

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து அதனை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் அண்டைய நாடுகளிலும் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இந்தியாவில் தினசரி நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காது அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது.

இதில் நோபாளம் மீதான கவலை அதிகரித்துள்ளது. அங்கு ஏப்ரல் மாதம் தொடக்கம் நோய்த் தொற்று வேகமாக உயர்ந்து கொரோனா சோதனைக்கு உள்ளாகுபவர்களில் 40 வீதமானவர்களுக்கு வைரஸ் தொற்றி இருப்பது அடையாளம் காணப்பட்டு வருகிறது.

நேபாளம் இந்தியாவுடன் 1,880 கிலோமீற்றர் நில எல்லையை பகிர்ந்துகொள்ளும் நிலையில் இரு நாட்டு மக்களும் வர்த்தகம், சுற்றுலா மற்றும் குடும்ப காரணங்களுக்காக கட்டுப்பாடுகள் இன்றி எல்லையை கடந்து வருகின்றனர்.

இந்தியா சென்று திரும்பிய நேபாளத்தின் முன்னாள் மன்னர் கயனேந்திராவுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பங்களாதேஷிலும் கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு ஏப்ரல் 6 ஆம் திகதி தொடக்கம் தேசிய அளவில் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அது வரும் மே மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலும் நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பு வெகமாக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு சுகாதார சேவை நிலைகுலையும் அச்சம் உருவாகியுள்ளது.

அங்கு முடக்க நிலை இல்லாதபோதும் சில மாகாணங்களில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.

இலங்கையிலும் ஏப்ரல் நடுப்பகுதியில் திடீரென நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்திய வைரஸ் திரிபே அண்டை நாடுகளில் நோய்த் தொற்று அதிகரிக்கக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் புதுவகை கொரோனா தொற்று, தடுப்பூசியால் கிடைக்கும் பாதுகாப்பை மீறிப் பரவி வரக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

Mon, 05/10/2021 - 16:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை