நாட்டில் கொரோனா தீவிரமாக பரவும் பல சிவப்பு வலயங்கள்

- அவசர தீர்மானத்திற்கு GMOA வேண்டுகோள்

நாட்டில் கொவிட் தொற்று தீவிரமாக பரவும் பல சிவப்பு வலயங்கள் உருவாகியுள்ளன. எமது வைத்தியசாலை கட்டமைப்புக்குள் வைத்து பராமரிக்கக் கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கையை கடந்தால் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அரசாங்கம் உடனடியாக தனிமைப்படுத்தும் நிலையங்கள் மற்றும் வீட்டுக்குள் கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் தீர்மானங்களை எடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இவ்வாறு கூறினார்.  

“நாட்டில் பல மாவட்டங்களில் கொவிட் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. பல பிரதேசங்கள் கொவிட் தொற்று பரவும் சிவப்பு வலயங்களாகவும் உள்ளன. தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாத்திரம் 2500 இற்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

இத்தருணத்தில் எமது நாட்டின் முன்னோக்கிய பயணம் தொடர்பில் நாம் மதிப்பாய்வுகளை செய்ய வேண்டியது காட்டாயமாகும். நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு எத்தனை கட்டில்கள் வேண்டும்? எத்தனை அவசர சிக்கிச்கை கட்டில்கள் வேண்டும்? மருந்துகள் எவ்வளவு அவசியம்? ஒக்ஸிஜன் எவ்வளவு அவசியம்? என்பன தொடர்பிலும் ஏனைய சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் தீவிர அவதானத்தை செலுத்த வேண்டும்.

வைத்தியர்கள் உட்பட முழு சுகாதார கட்டமைப்பும் மிகவும் சிரமத்துக்கு மத்தியில்தான் இயங்குகிறது. தொற்றாளர்கள் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் பட்சத்தில் நாம் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். கொவிட் தொற்றை, தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் மற்றும் வீட்டுக்குள் கட்டுப்படுத்திக்கொள்ளும் யோசனையொன்றை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளோம்” என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்    

Wed, 05/12/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை