ஒரு மொழி பேசும் இரண்டு தேசிய இனங்களின் தாயகம்

தமிழ்பேசும் மக்களது பூர்வீகமே வடக்கு, கிழக்கு - ஹசனலி

வடக்கு-, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற அடிப்படையில் ஒரு மொழி பேசும் இரு தேசியங்களுக்கான தீர்வு அமைய வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் அரசியல் தீர்வு எவ்வாறு அமையவேண்டும் எனக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அபிவிருத்தி என்ற மாயையில் யார் ஆட்சியாளர்களிடம் ஏமாந்தாலும் நாம் எமது சமூக மேன்பாட்டுக்காக அதன் நிலத்தொடர்பு அரசியல் உறுதிப்பாட்டுக்காக தொடர்ந்து உழைப்போம். எமது கோரிக்கைகள் இந்த அரசின் அரசியல் யாப்பு சபைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்பு இந்திய அமைதிகாக்கும் படையின் பாதுகாப்பில் வடக்கு,-கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றது. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் இருப்பதாக உலகுக்குக் காட்டுவதாக அந்தத் தேர்தல் நடைபெற்றது.

இரண்டு தசாப்தங்களுக்கு பின்பு வடக்கோடு சேர்ந்த கிழக்கைப் பிரித்தார்கள். நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணத்தை எங்களுக்குத் தந்துவிட்டுத்தான் அவர்கள் பிரித்திருக்க வேண்டும். பிரித்ததை மக்கள் அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் என்று உலகுக்குக் காட்டுவதற்கும் தமிழ் பேசும் மக்களுக்குரிய இறுதித் தீர்வு தேவையில்லை என்பதை உலகிற்கு விளம்பரப்படுத்துவதற்கும் தான் முதலாவது கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றது.

எந்த நிபந்தனைகளும் இல்லாமல் நீதிமன்றத்தின் உதவியுடன் கிழக்கு பிரிக்கப்பட்டுள்ளது. இதற்காக எமது பெரு விருட்சத்தில் பெரும்தலைவருடன் பயணித்தவர்கள் செயற்பட்டது எமது சமூகத்துக்கு செய்த பெரும் துரோகம். இதனால் பல பிரச்சினைகள் கூர்மையடையப் போகின்றன என்று நாம் ஆருடம் கூறியது இன்று நடைபெறுகின்றது என்றார்.

 

(காரைதீவு குறூப் நிருபர்)

Fri, 05/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை