இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் நிறுத்தம் அமுல்: பலஸ்தீனர் வெற்றி கொண்டாட்டம்

மற்றொரு போருக்கு தயார் என ஹமாஸ் எச்சரிக்கை

எகிப்தின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் நேற்று வெள்ளிக்கிழமை அமுலுக்கு வந்தது.

எனினும் மற்றொரு போருக்கு தயாராக இருப்பதாக எச்சரித்திருக்கும் ஹமாஸ், ஜெரூசலத்தில் இஸ்ரேலின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்த மோதல்களில் காசா பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

‘நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஒன்றுக்கான எகிப்தின் முயற்சியை பாதுகாப்பு அமைச்சரவை வியாழக்கிழமை பின்னேரத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

காசாவில் ஏற்பட்ட அழிவுகளை சரிசெய்வதாக அமெரிக்க ஜனாதிபதி ஜொ பைடன் உறுதி அளித்துள்ளார். மக்கள் செறிந்து வாழும் இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள காசா பகுதி மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 232 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு. காசாவில் இருந்து இஸ்ரேல் மீது வீசப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களில் 12 பேர் பலியாகினர்.

இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களால் காசாவில் உள்ள மக்கள் கடந்த 11 நாட்களாக அச்சத்துடனேயே வாழ்ந்தனர். இந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் திரண்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ‘(இஸ்ரேல்) ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் வெற்றிபெற்றது’ என்று அங்கு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் கூறப்பட்டது.

கிழக்கு ஜெரூசலத்தின் செய்க் ஜர்ராஹ் பகுதியில் நேற்றுக் காலை பலஸ்தீன கொடிகளை அசைத்தபடி கார் வண்டிகளில் சென்ற பலஸ்தீனர்கள் ஹோர்னை ஒலிக்கச் செய்து வெற்றியை கொண்டாடினர்.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு போர் நிறுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, பலஸ்தீன ரொக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து வீசப்பட்டதோடு இஸ்ரேல் குறைந்தது ஒரு வான் தாக்குதலை நடத்தியது.

அடுத்த தரப்பினால் மீறப்படும் போர் நிறுத்தத்திற்கு பதில் கொடுக்க தயாராக இருப்பதாக இரு தரப்பும் குறிப்பிட்டுள்ளன. இந்த போர் நிறுத்தத்ததை கண்காணிப்பதற்கு இரு தூதுக்குழுவை அனுப்பி இருப்பதாக எகிப்து குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு ஜெரூசலத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட பதற்ற சூழலை அடுத்து இந்த மோதல் வெடித்தது. குறிப்பாக நோன்பு காலத்தில் புனித அல் அக்சா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேல் பொலிஸார் நுழைந்தது மற்றும் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதல் சம்பவங்களும் இதில் அடங்கும். இந்த மோதல் காரணமாக காசாவின் பெரும்பாலான மக்களுக்கு நோன்புப் பெருநாளைக் கொண்டாட முடியாமல் போனது. இந்நிலையில் பிற்போடப்பட்ட நோன்புப் பெருநாள் உணவு காசா எங்கும் நேற்று பகிரப்பட்டது.

இஸ்ரேல் வானொலிகள் வழக்கத்திற்கு திரும்பியதோடு அதன் மணித்தியால செய்திகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மீண்டும் ஒலிபரப்ப ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

உயிரிழப்புகள்

கடந்த 11 நாட்களாக இடம்பெற்ற மோதல்களில் காசாவில் 232 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் 65 சிறுவர்களும் அடங்குவதாக அந்த பகுதியின் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வான் தாக்குதல்களில் அங்கு மேலும் 1,900 பேர் காயமடைந்துள்ளனர். காசாவில் தாம் 160 போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் கூறியபோதும் அதனை உறுதி செய்ய முடியவில்லை.

பலஸ்தீன போராளிகளின் ரொக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் 12 பேர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலியர்கள் தூக்கத்தை இழந்து அச்சத்தில் இரவை கழிக்கச் செய்தது. அடிக்கடி ஒலிக்கும் சைரன் ஒலியால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் வலுவான எதிரியுடன் வெற்றிகரமாக போராடியதாக குறிப்பிட்டுள்ளது.

‘இன்று போர் முடிகிறது என்பது உண்மையே, ஆனால் போருக்கு நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதையும் இந்தப் போராட்டத் திறனை நாம் தொடர்ந்து வளர்த்துக்கொள்வோம் என்பதையும் (இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்) நெதன்யாகு மற்றும் முழு உலகமும் அறிந்துகொள்ள வேண்டும்’ என்று ஹமாஸ் அரசியல் பிரிவின் மூத்த உறுப்பினர் ஒருவரான இஸத் எல் ரெஷிக் தெரிவித்துள்ளார். டோஹாவில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேசிய அவர், ஜெரூசலத்தில் அல் அக்ஸா பள்ளிவாசல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கிழக்கு ஜெரூசலத்தில் பலஸ்தீனர்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, இவை ‘ஒரு சிவப்பு கோடு’ என்று குறிப்பிட்டார்.

‘ஜெரூசலத்தின் வாள் என்ற இந்த போரின் முடிவு என்பது இதற்கு முன்னர் போன்றதல்ல. ஏனென்றால் பலஸ்தீன மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதோடு தமது நிலம் மற்றும் புனித தலங்களை பாதுகாப்பதற்கு எவ்வாறு போராடுவது என்பதை அறிந்துள்ளனர்’ என்றும் ரெஷிக் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலியர் ஆதங்கம்

‘மோதல் முடிவுக்கு வந்தது நல்லது. ஆனால் துரதிருஷ்ட வசமாக அடுத்த மோதலுக்கு அதிக காலம் எடுக்காது என்று எமக்குத் தோன்றுகிறது’ என்று டெல் அவிவில் வசிக்கும் 30 வயதான மென்பொருள் பொறியியலாளர் ஈவ் இசேவ் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்த நிலையிலேயே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோதலை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வலியுறுத்தினார் என்பதோடு எகிப்து, கட்டார் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டியது.

அமெரிக்க நேரப்படி கடந்த வியாழக்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய பைடன், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்கள் எதிர்கொண்ட துயரங்களுக்கு தனது அனுதாபத்தை வெளியிட்டார். காசாவின் புனரமைப்புக்காக விரைவான மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இந்த உதவிகள் ஹமாஸ் அமைப்பின் போட்டி நிர்வாகமான ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பலஸ்தீன அதிகார சபையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் என்று பைடன் குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீன அதிகாரசபை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை தளமாகக் கொண்டு செயற்படுகிறது.

ஹமாஸ் அமைப்பை அமெரிக்கா பயங்கரவாதக் குழுவாக அறிவித்திருக்கும் நிலையில் அமெரிக்கா அதனை அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பலவீனமான போர் நிறுத்தம்

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன தலைவர்கள் அமைதியை நிலைநிறுத்துவதற்கு அப்பால் சென்று மோதல் ஏற்படுவதற்கான காரணிகள் பற்றி தீவிர பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார். எனினும் இணக்கம் எட்டப்பட்டிருக்கும் இந்த போர் நிறுத்தத்தில் அவ்வாறான காரணங்கள் பற்றி கருத்தில் கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தத்ததை வரவேற்பதாகக் குறிப்பிட்டிருக்கும் பலஸ்தீன முன்னணி இராஜதந்திரியான ரியாத் அல் மலிக்கி, வன்முறை வெடித்ததற்கான முக்கிய காரணிகள் பற்றி பேசப்படாத நிலையில் அது போதுமானதாக இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்ரேலின் அத்துமீறல் மற்றும் கிழக்கு ஜெரூசலத்தின் செய்க் ஜர்ராஹ் பகுதியில் பலஸ்தீன குடும்பங்கள் அவர்களின் சொந்த வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பது போன்ற காரணங்களே இந்த மோதலைத் துண்டியமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் இஸ்ரேலிடம் இருந்து சலுகையை வென்றதாக ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தொலைக்காட்சிக்கு ஹமாஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூற்றை இஸ்ரேல் அதிகாரிகள் மறுத்துள்ளனர். இராணுவ நடவடிக்கைகளை உடன் நிறுத்துவதற்கு மாத்திரமே போர் நிறுத்தத்திற்கு இணக்கம் எட்டப்பட்டதாகவும் இது ஒரு ‘பரஸ்பரம் நிபந்தனையற்ற போர்நிறுத்தம்’ என்றும் இஸ்ரேல் விபரித்துள்ளது.

ஆனால் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த உடன் ஹமாஸ் அதிகாரிகள் பலரும் வெற்றி அறிவிப்பை வெளியிட்டனர். ‘இது மகிழ்வூட்டும் வெற்றி’ என்று காசா நகரில் கூடிய ஆயிரக்கணக்கானவர்களின் முன்னிலையில் ஹமாஸ் அரசியல் பிரிவின் மூத்த உறுப்பினரான கலீல் அல் ஹய்யா தெரிவித்தார்.

போர் நிறுத்தம் ஆரம்பமான அதிகாலை இரண்டு மணிக்கே காசா மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாட ஆரம்பித்தனர். துப்பாக்கி வேட்டுகளை வானத்தில் செலுத்தியும் கார்களின் ஹோர்ன்களை ஒலிக்கச் செய்தும் தமது மகிழ்ச்சியை வெளியிட்டனர்.

மேற்குக் கரை நகரங்களான நப்லுஸ், ஜெனின், ரமல்லாஹ் மற்றும் ஹெப்ரோனிலும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு ஜெரூசலத்திலும் பலஸ்தீனர்கள் பட்டாசு கொழுத்தியும் வாகனங்களில் ஹோர்ன் ஒலியை எழுப்பியும் கொண்டாடினர்.

இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் குறைந்தது 46 பாடசாலைகள் உட்பட குறைந்தது 51 கல்வி நிலையங்கள் சேதமடைந்திருப்பதாக ஐ.நாவின் மனிதாபிமான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காசாவில் ஐ.நாவினால் நடத்தப்படும் 58 பாடசாலைகளில் குறைந்தது 66,000 பேர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இஸ்ரேலிய தாக்குதல்களால் அங்கு ஆறு மருத்துவமனைகள் மற்றும் 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இதில் காசாவில் இருக்கும் ஒரே கொரோனா சோதனை ஆய்வுகூடமும் சேதமடைந்துள்ளது.

காசா மின்சார கட்டமைப்பு சேதமடைந்திருப்பதால் அங்கு நாளாந்தம் 20 தொடக்கம் 21 மணி நேரம் மின் வெட்டு கடைப்பிடிக்கப்படுகிறது. இது நீர் மற்றும் துப்புரவு வசதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 250,000 பேர் வரை குடிநீரை பெற முடியாத நிலை எற்பட்டுள்ளது.

Sat, 05/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை