ரஷ்ய ஸ்புட்னிக்-வி- தடுப்பூசிகள் முதற்தொகுதி நாட்டை வந்தடைந்தன

அமைச்சர் சன்ன ஜயசுமன விமான நிலையத்தில் பொறுப்பேற்பு

இலங்கையின் கொரோனா தொற்றுக்கெதிரான போராட்டத்துக்கு உதவும் நோக்கில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 15,000 ஸ்புட்னிக்--வி தடுப்பூசி டோஸ்கள் நேற்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கட்டார் ஏயர்வேஸுக்கு சொந்தமான கியூ. ஆர் -1668 என்ற சரக்கு விமானத்தில் இவை நேற்று அதிகாலை 1.15 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.இந்த தடுப்பூசி தொகையினை மருந்து உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குபடுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றார்.

தடுப்பூசிகளின் தொகை அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் பல வாகனங்களில் சிறப்பு குளிர்சாதன வசதிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் - வி தடுப்பூசிகளை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.மொத்தம் 13 மில்லியன் ஸ்பூட்னிக் - வி தடுப்பூசி டோஸ்களை ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்ய இலங்கை தீர்மானித்துள்ளது.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 05/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை