வியன்னா பேச்சுவார்த்தை: அமெரிக்க தடைகளை தளர்த்த ஈரான் எதிர்பார்ப்பு

ஈரான் அணுசக்தி விவகாரம் தொடர்பில் வியன்னாவில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையில் ஈரான் மீதான எண்ணெய், வங்கிகள், ஏனைய துறைகள் மற்றும் பெரும்பாலான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் தடையை அகற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக ஈரான் தலைமை பேச்சுவார்த்தையாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனினும் 2015 ஆம் ஆண்டின் அணு உடன்படிக்கையின் கடப்பாடுகளுக்கு ஈரான் மற்றும் அமெரிக்கா முழு ஆதரவை அளிக்கும் வகையில் இடம்பெறும் இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யா மற்றும் மேற்கு ஐரோப்பிய சக்திகள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளன.

‘இதுவரை எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் எரிவாயு உட்பட ஈரான் எரிசக்தித் துறை, வாகனத் தொழில்துறை, நிதி, வங்கி மற்றும் துறைமுகம் மீதான தடைகள் உட்பட அனைத்தும் அகற்றப்பட வேண்டும்’ என்று ஈரானிய பிரதி வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்கி அந்நாட்டு அரச ஊடகத்திற்கு கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டுள்ளார். எனினும் எந்த அடிப்படையில் இந்தத் தடைகள் அகற்றப்படுகிறது அல்லது அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் இணக்கத்தை வெளியிட்டு அதன் கடப்பாடுகளுக்கு திரும்புவது பற்றி அரக்கி எந்த கருத்தும் கூறவில்லை.

‘இருதரப்பு நிலைப்பாடுகளையும் எட்டுவது மற்றும் எமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்’ என்ற அவர் குறிப்பிட்டார்.

‘அவர்கள் இணங்கினால் உடன்படிக்கை எட்டப்படும். இல்லாவிட்டால் உடன்படிக்கை இருக்காது’ என்றும் அவர் தெரிவித்தார்.

‘எமக்கு சிறிது காலமே இருக்கும் பின்னணியில் இந்த வாரத்தில் மேலும் முன்னேற்றத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்று இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனியின் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

காலாவதியாகும் ஈரான் அணு செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பை தொடர்வது குறித்து ஈரான் மாற்றும் ஐ.நா அணு கண்காணிப்பு அமைப்பு இடையே இணக்கம் ஒன்று இடம்பெறும் நிலையில் மே 21 ஆம் திகதி உடன்படிக்கை ஒன்றை எட்ட எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மற்றும் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான 2015 அணு உடன்படிக்கையை புதுப்பிப்பது தொடர்பில் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. இதன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

Mon, 05/03/2021 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை