உழைக்கும் சமூகத்தின் வறுமையை ஒழிக்க பொருளாதார திட்டம்

மே தின செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய

உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை எமது சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான தெளிவான பொருளாதார திட்டத்தை அரசாங்கம் வகுத்து, முறையாக செயற்படுத்தி வருகிறது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மே தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்தும் அதே நேரம், விவசாய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதைய கோவிட் 19 நோய்த்தொற்றினால் உலகில் மிகவும் சவாலுக்குள்ளாகியுள்ள பிரிவினர் தொழிலாளர் வர்க்கமாகும். எமது நாட்டின் உழைக்கும் மக்களும் முகம்கொடுத்திருக்கும் அந்த யதார்த்தத்தை அரசாங்கம் நன்கறிந்திருக்கிறது. எனவே, உழைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடிய கட்டுப்பாடுகளை விதிக்காமல் அவர்கள் தமது இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கல்வித் தகைமைகள் இல்லாத காரணத்தினால் நிர்க்கதியான நிலையிலிருந்த ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு அரச சேவையில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் மிக உயர்ந்த பயனை அனுபவிக்கும் வாய்ப்பு உழைக்கும் மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கிடைத்துள்ளது. கோவிட்19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 05 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு அளித்து உழைக்கும் மக்களின் போராட்டத்திற்கு அரசாங்கம் ஆதரவு அளித்தது.

கோவிட்19 தொற்றுநோய் காரணமாக எதிர்பாராத விதமாக தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் மே தின கொண்டாட்டங்களையும் ஊர்வலங்களையும் தொழிலாளர்கள் இழந்துள்ளனர். ஆயினும்கூட, உங்கள் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் வலுவானது என்பதை நாங்கள் அறிவோம்.

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்திற்கான திட்டத்துடன் கைகோர்க்கும் உங்களுக்கு சர்வதேச தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்த, அர்த்தப்படுத்திய மகிழ்ச்சியுடன் எனது சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது நாட்டின் உழைக்கும் மக்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

Sat, 05/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை