கூட்டணிக் காரியாலயமும் யோகேஸ்வரனின் வீடும்

- எரிக்கப்பட்ட 40ஆவது ஆண்டு நினைவு நாள்!

1981.05.31ஆம் திகதி   கூட்டணிக் கட்சிக் காரியாலயமும் அன்றைய யாழ் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடும் எரிக்கப்பட்டன. இவை மறக்க முடியாத சம்பவங்கள், இச்சம்பவங்கள் இடம்பெற்று 40ஆவது ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

1981ஆம் ஆண்டு   ஆட்சியிலிருந்த ஐ.தே. கட்சி, மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவ 1981 ஜுன் 4ஆம் திகதி ஒரு தேர்தலை  நடத்தியது. அன்று ஐ.தே. கட்சி பாராளுமன்றத்தில் அதிகூடிய பெரும்பான்மையைக் கொண்ட தனது அதிகார வெறியை யாழ்ப்பாணத்திலும் நிலைநாட்ட படாதபாடுபட்டது.

31.05.1981 ஞாயிற்றுக்கிழமை நாச்சிமார் கோவிலடியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காவலுக்கு நின்ற பொலிஸ்காரர்களை சுட்ட சம்பவத்துடன் தேர்தல் கடமைகளுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான அடியாட்களுடன் பொலிஸ்காரரும் சேர்ந்து யாழ்ப்பாணத்தை நிர்மூலமாக்கினர். கோவிலடியில் ஆரம்பித்த வன்முறை நகருக்கும் பரவியது! கே. கே. எஸ் வீதியிலிருந்த வீடுகளும் கடைகளும் வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டு தீமூட்டப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பஸ்நிலையத்திற்கு முன்பாகவிருந்த 36 தொடர் வரிசைக் கடைகளில் பூபாலசிங்கம் புத்தகசாலை, மக்மிலன் புத்தக கடை, பொபி கபே, ராஜன் புத்தகசாலை, நியூ வசந்தாஸ், ஐங்கரன் ஸ்ரோர்ஸ், ராடோ கபே, றீகல் கூல்பார், வேலும் மயிலும் கடை, சிவாஸ் கூல்பார் (எல்லாவற்றையும் பெயரிடப்படவில்லை) போன்ற 27 கடைகள் பெற்றோல் ஊற்றி தீயிடப்பட்டன.
இதைவிட நவீனசந்தையில் உள்ள கடைகள், ஆஸ்பத்திரி வீதியிலிருந்த கடைகள், கஸ்தூரியார் வீதிக் கடைகள் என எல்லாமே எரித்து நாசமாக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனுடைய வீடும் அவரதும் அவரது நண்பரதும் வாகனங்களும் எரிக்கப்பட்டன. வந்தவர்களுக்கு எம்.பி யாரெனத் தெரியாத காரணத்தால் மயிரிழையில் அவரும் அவரது மனைவியும் உயிர்தப்பினர். கூட்டணியின் காரியாலயமும் முற்றாக எரிக்கப்பட்டது.   சுன்னாகத்திலும்சில கடைகள் கடையுடைப்புக்கும், சூறையாடலுக்கும் தீவைப்புக்கும் உட்பட்டன! 

தங்கராஜா முகுந்தன்

Mon, 05/31/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை