இன்று முதல் நடமாடும் விற்பனை வாகனங்கள்

நாட்டின் சகல பாகங்களிலும் ஏற்பாடு

 

நாடு முழுவதும் பயணத்தடை நடைமுறையிலுள்ள இச்சந்தர்ப்பத்தில் மக்கள் தமக்கான அத்தியாவசிய பொருட்களை இலகுவாக பெற்றுக்  கொள்ளும் வகையில் இன்று முதல் நடமாடும் விற்பனை வாகனங்களை நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தில் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வகையில் நடமாடும் வாகனங்களுக்கு விசேட அனுமதி தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக விசேட பொறிமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று நடமாடும் விற்பனை வாகனங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளும் வகையில் நேற்று முன்தினம் முதல் பொருளாதார மத்திய நிலையங்களை மூன்று தினங்களுக்கு திறக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்குமென்று தெரிவித்துள்ள அவர் கொழும்பு மெனிங் சந்தை நேற்றும் இன்றும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தையிலும் சில்லரை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் மாத்திரமே மரக்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் மூன்று மற்றும் நான்காம் திகதிகளிலும் பொருளாதார மத்திய நிலையங்களைத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு அவர்களினதும் பொதுமக்களினதும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு சீருடைகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 05/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை