சகோதரத்துவ வாஞ்சையுடன் பெருநாளை கொண்டாடுவோம்

கலாநிதி ஹஸன் மௌலானா வாழ்த்து

இலங்கை தாய்நாட்டில் வாழும் சகல முஸ்லிம்களும் ஏனைய இன, மதங்களைச் சேர்ந்த மக்களுடன் சகோதரத்துவ வாஞ்சையுடனும் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்துடனும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று 'ஈதுல் பித்ர்' நோன்பு பெருநாளைக் கொண்டாடிட இந்நன்நாளில் தன் இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மற்றும் புத்த சாசனம், சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சரின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் அஸ் ஸெய்யத் அஷ் ஷெய்க்ஹ் கலாநிதி ஹஸன் மௌலானா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் அவர் ​மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, முஸ்லிம்கள் ரமழான் மாதம் முழுவதும் நோன்பிருந்து புதிய மாதத்திற்கான தலைப்பிறையைக் கண்டதும் கொண்டாடுவதே இந்த விஷேட ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள். இது இஸ்லாத்தில் முக்கிய பெருநாளாகும். ரமழான் மாத நோன்பானது எங்களது மார்க்கத்தின் முக்கிய ஐந்து தூண்களில் ஒன்றாக விளங்குவதோடு புனித அல் குர்ஆன் உலகிற்கு அருளப்பட்ட மாதமும் இதுவேயாகும்.

இக்காலப்பகுதியில் முஸ்லிம்கள் நோன்பிருந்ததோடல்லாமல் ஏனைய சகோதர இனங்களை சேர்ந்த மக்களோடும் வழமை போன்று நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவ உணர்வுடனும் செயற்படவும் தவறவில்லை. தேசிய நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் மாத்திரமல்லாமல் உயர்வு, தாழ்வு என்ற பேதமின்றி ஏழை, எளிய மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிய படி மிகுந்த அர்ப்பணிப்புக்களோடு இக்கடமையை நிறைவேற்றினர்.

நோன்பானது இச்சைகள், எல்லை மீறிய ஆசைகள் உள்ளிட்ட தவறான எண்ணங்களை கட்டுப்படுத்தல், மனிதாபிமானம் மற்றும் கொடை வழங்கும் மனப்பான்மையை மேம்படுத்துதல், உடல், உள மற்றும் ஆன்மீக தூய்மையை ஏற்படுத்துதல் என்பவற்றைப் பிரதான நோக்கங்களாகக் கொண்டுள்ளன. அவற்றுக்கு ஏற்ப நோன்பு கடமையை நிறைவேற்றி இந்நன்நாளில் பெருநாளைக் கொண்டாடும் இலங்கைத் தாய்நாட்டில் வாழும் சகல முஸ்லிம்களும் ஏனைய இன, மதங்களைச் சேர்ந்த மக்களுடன் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று இப்பெருநாளைக் கொண்டாடிட என் இதயபூர்வமான நல் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.

அதேநேரம் தற்போது உலகிற்கே பெரும் சவாலாக விளங்கும் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொண்டாடப்படும் இப்பெருநாளை எமது அரசாங்கத்தினதும் சுகாதார தரப்பினரதும், வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினதும் வழிகாட்டலுக்ளுக்கு ஏற்ப சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றிக் கொண்டாடுமாறு சகலரிடமும் நான் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு இக்கொவிட் 19 தொற்று அச்சுறுத்தல் இந்நாட்டிலிருந்தும் உலகிலிருந்தும் விரைவில் முற்றாக நீங்கிடவும், பலஸ்தீன சகோதர மக்கள் எதிர்கொண்டுள்ள அசாதாரண சூழ்நிலை விரைவாக நீங்கி அமைதி சமாதான சூழலுக்கு அவர்கள் துரிதமாகத் திரும்பவும் உலக மக்கள் அனைவரும் சாந்தி சமாதானத்துடன் வாழ்வும் இந்நன்நாளில் பிரார்த்துப்போம். ஈத் முபாரக் !

 

Fri, 05/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை