காசா - இஸ்ரேலுக்கு இடையில் வலுவான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தர் முயற்சி

காசா மற்றும் இஸ்ரேலில் 11 நாட்கள் நீடித்த மோதலுக்கு பின்னர் எட்டப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை பலப்படுத்துவதற்கும் நீண்ட காலத்திற்கு வன்முறைகளை தவிர்ப்பதற்கும் மத்தியஸ்தர்கள் முயன்று வருகின்றனர்.

இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த எகிப்து தூதுக் குழுவொன்று கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை சென்றடைந்ததோடு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் அடுத்த வாரம் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த மோதலில் பலஸ்தீன போராட்டக் குழுவான ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இரு தரப்பும் வெற்றிக்கு உரிமை கோரியுள்ளன.

இதில் காசாவில் 66 சிறுவர்கள் உட்பட 248 பேர் கொல்லப்பட்டதோடு இஸ்ரேல் தரப்பில் 12 பேர் பலியாகினர்.

கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம், வான் தாக்குதல்கள் மூலம் ஹமாஸின் ஆயுதப் பலத்தை குறைத்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வருகிறார்.

மறுபுறம் இதனை மகிழ்ச்சி தரும் வெற்றி என்று ஹமாஸ் அறிவித்திருப்பதோடு, 'இது பல வெற்றிகளை பார்த்த புதிய வாயில்களை திறந்துவிட்டது' என்று ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியேஹ் தெரிவித்துள்ளார்.

இந்த போர் நிறுத்தத்தில் எகிப்து, கட்டார், அமெரிக்கா மற்றும் ஐ.நா மத்தியஸ்த பணிகளில் ஈடுபட்டிருந்தன.

இது குறித்து பாதுகாப்புச் சபை கடந்த சனிக்கிழமை முதல் அறிவிப்பை வெளியிட்டிருந்ததோடு, மத்தியஸ்த செயற்பாடுகளுக்கு பாராட்டை வெளியிட்டதோடு முழுமையான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது.

எகிப்து மத்தியஸ்த குழு காசா, இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு பயணங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்தக் குழு இணக்கம் எட்டப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதோடு சமீபத்திய சண்டைக்கு வழிவகுத்த நடைமுறைகளை தடுக்கவும் முயற்சித்து வருவதாக எகிப்து இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அது பற்றிய விபரங்கள் அவர் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இஸ்ரேல், மேற்குக் கரை அதேபோன்று எகிப்து, ஜோர்தானுக்கும் பயணிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பை ஒரு பயங்கரவாதக் குழுவாக அமெரிக்கா பட்டியலிட்டிருப்பதால் அந்த அமைப்புடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தத்திற்கு பின் காசாவில் அமைதி நிலவும் சூழலில் மனிதாபிமான உதவிகள் அங்கு சென்ற வண்ணம் உள்ளது. கெரம் ஷெலோம் கடவையை கடந்து மேலும் பல லொறிகள் கடந்த சனிக்கிழமை காசாவை அடைந்த நிலையில் எகிப்தில் இருந்து 130 வாகனங்கள் அந்த பகுதியை அடைய திட்டமிட்டுள்ளன.

Mon, 05/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை