கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துங்கள்

- அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குதல் மற்றும் கொள்வனவு செய்தல் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதை வேளை, குறுகிய காலத்தில் முடிந்தளவு அதிகமான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தினமும் கூடும் கொரோனா வைரஸ் தொடர்பான குழுவுடனான பேச்சுவார்த்தை நேற்றைய தினமும் (07) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி அது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்று அதிகமாக பரவவாய்ப்புள்ள மேல்மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும். ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள 06 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் சுகாதார அமைச்சின் கையிருப்பிலுள்ளது. உலகின் 51நாடுகளைச் சேர்ந்த 55 மில்லியனுக்கும் அதிகமானவருக்கு தடுப்பூசி வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்படி நாடுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த தடுப்பூசிகளை விரைவாக கொள்வனவு செய்வதற்கு உள்ள வாய்ப்புக்களை ஆராயுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். முதலாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாம்
கட்டமாக எஸ்ட்ரா செனேகா தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கிணங்க அந்த தடுப்பூசிகளை மேலதிகமாக கொண்டுள்ள நாடுகளிடமிருந்து அதனை பெற்றுக் கொள்வதற்கு தேவையான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்படும் பிரதேசங்களை முடக்கி பயணத்தடைகளை விதித்து வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உச்சளவில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை தொடர்பிலும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் தேவையானளவு வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொது மக்களின் பூரண ஒத்துழைப்பு மிகவும் அவசியமென்றும் இதன் போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 05/08/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை