முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள்; பிரதமருடன் பிரத்தியேக சந்திப்பு

- அவ்வேளையிலேயே பிரதமர் இப்தாருக்கு ஏற்பாடு
- முஷாரப் எம்.பி

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அண்மையில் அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரத்தியேகமாக கலந்துரையாடுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் 7 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தர்ப்பம் கோரியிருந்ததாகவும் அதற்கு குறித்த தினத்தில் 5.30 மணிக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதாக பிரதமர் கூறியதாக தெரிவித்த முஷாரப், 5.30 மணிக்கு சந்திப்பு நிகழ்வதாக இருந்தால், இப்தார் நேரம் என எடுத்துக்கூறப்பட்டதையடுத்து தான் இப்தாருக்கான ஏற்பாட்டை செய்வதாக பிரதமர் தெரிவித்ததாகவும் , பிரதமரின் அழைப்பின் நிமித்தம் அங்கு சென்ற தாம், இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டு பிரதமருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் அவற்றில் பலவற்றினை சுமுகமாக தீர்ப்பதற்கு வழிவகைகள் செய்வதாக பிரதமர் உறுதியளித்ததாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், ஒரு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது சாதாரண விடயம் எனவும் முஷாரப் முதுநபீன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு சிலர் அரசியல் செய்கின்றமையை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் மக்களின் பங்களிப்புடன் மிக பிரமாண்டமாக நடைபெறும் இப்தார் நிகழ்வு COVID தொற்று காரணமாக ஒரு சிலரின் பங்களிப்புடன் நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் கடந்த வியாழக்கிழமை அறிக்கையொன்றின் மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 05/10/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை