Header Ads

போர் நிறுத்த எதிர்பார்ப்பு அதிகரிப்பு; மோதல் தணிவின்றி தொடர்ந்து நீடிப்பு

காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ஓரிரு தினங்களுக்குள் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஹமாஸ் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ‘இஸ்ரேல் மக்களுக்கு அமைதி மற்றும் பாதுகாப்பு நிலைநாட்டப்படும் வரை’ தாக்குதல்களை தொடர தீர்மானித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த புதனன்று தெரிவித்திருந்தார்.

நேற்று வியாழக்கிழமை காலையிலும் காசா மீது இஸ்ரேல் 100க்கும் அதிகமான வான் தாக்குதல்களை நடத்தியது. பலஸ்தீன போராளிகளின் ரொக்கெட் தாக்குதல்களும் தொடர்ந்தன.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் பல வாரங்கள் நீடித்த பதற்றத்தை தொடர்ந்து காசா மோதல் வெடித்தது. கிழக்கு ஜெரூசலத்தின் புனித அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து இஸ்ரேலிய பொலிஸாரை வெளியேற ஹமாஸ் விடுத்த கெடு முடிவடைந்ததை அடுத்து இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதோடு அது இஸ்ரேலை வான் தாக்குதல்களுக்கு தூண்டியது.

கடந்த 11 நாட்களாக இடம்பெறும் வன்முறைகளில் காசாவில் 65 சிறுவர்கள் மற்றும் 39 பெண்கள் உட்பட குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,710 பேர் காயமடைந்துள்ளனர். இதில் காசாவில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் விசேட தேவையுடைய ஒருவர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் மூன்று வயது மகள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் இஸ்ரேல் தரப்பில் இரு சிறுவர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இருந்து 4,000க்கும் அதிகமான ரோக்கெட் குண்டுகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு

‘தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போர் நிறுத்த முயற்சி வெற்றிபெறும் என்று நான் நினைக்கிறேன்’ என ஹமாஸ் அரசியல் பிரிவின் மூசா அபூ மர்சூக் லெபனானின் ‘அல் மயதீன்’ தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

‘ஓரிரு நாட்களுக்குள் போர் நிறுத்தம் ஒன்றை எதிர்பார்க்கிறேன். இரு தரப்பு உடன்படிக்கை அடிப்படையில் இந்தப் போர் நிறுத்தம் இருக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களை நிறுத்துவது குறித்து இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன தரப்புகளுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிறுத்தத்திற்கான அடிப்படை தொடர்பில் இரு தரப்பும் இணக்கத்தை வெளியிட்டிருப்பதாக எகிப்து பாதுகாப்பு தரப்பினர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். எனினும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இன்று வெள்ளிக்கிழமைக்குள் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்படலாம் என்றும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் தரப்புகளை மேற்கோள்காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் தலைமைகள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்துடன் எகிப்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நோக்கம் கிட்டத்தட்ட நிறைவு பெறும் நிலையில் இருப்பதாக அமெரிக்க மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் மேற்படி பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த வாரத்தில் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படும் என்று பைடன் நிர்வாகம் நம்பிக்கையில் இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த புதன்கிழமை நான்காவது தடவையாக நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து பேசினார். அதில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு வழிவகுக்கும் வகையில் தாக்குதல்களை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக நெதன்யாகுவிடம் பைடன் கூறியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் பிரான்ஸ் கடந்த புதன்கிழமை பாதுகாப்பு சபையில் கொண்டுவந்த தீர்மானமும் தோல்வி அடைந்தது. இந்தத் தீர்மானம் மோதலை குறைக்கும் முயற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா குறைகூறியுள்ளது. இஸ்ரேல் - காசா மோதலை தணிப்பதற்கு பாதுகாப்புச் சபை மேற்கொண்டு வரும் முயற்சிகள் அனைத்துக்கும் அமெரிக்கா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மத்திய கிழக்கு அமைதித் தூதுவர் டோர் வென்னசலான்ட், கட்டாரில் உள்ள ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியேஹ்வை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கட்டாரைத் தளமாகக் கொண்ட அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மோதல் தொடர்கிறது

நேற்று அதிகாலையில் இஸ்ரேல் காசா மீதான தனது வான் தாக்குதல்களை ஆரம்பித்த நிலையில் இரு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. கான் யூனிஸில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

ரொக்கெட் வீசும் தளங்கள் மற்றும் ஹாமாஸுக்கு சொந்தமான பாதுகாப்பு வளாகங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த வான் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் தாக்குதலில் காசா புறநகர் பகுதியான சப்ராவில் 14 வயதான அமீரா எஸ்லீம் என்ற சிறுமியும் மூன்று குடும்ப உறுப்பினர்களும் காயமடைந்தனர்.

‘ஏவுகணை விழும்போது நாம் சோபா ஒன்றில் அமர்ந்திருந்தோம். கடுமையான புகை மூண்டதால் எம்மால் எதனையும் பார்க்க முடியாமல்போனது’ என்று மருத்துவமனை படுக்கையில் இருந்து அந்த சிறுமி தெரிவித்தார்.

இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் சுமார் 450 கட்டிடங்கள் அழிக்கப்பட்டு அல்லது சேதமடைந்துள்ளன. இதில் ஆறு மருத்துவமனைகள் மற்றும் ஒன்பது ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்களும் அடங்குவதாக ஐ.ந மனிதாபிமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 52,000க்கும் அதிகமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதோடு பெரும்பாலானவர்கள் காசாவில் ஐ.நாவினால் நடத்தப்படும் பாடசாலைகளில் அடைக்கலம் பெற்றுள்ளனர். மறுபுறம் இஸ்ரேலின் பீர்ஷபா மற்றும் காசா எல்லையை ஒட்டிய பகுதிகளில் ரொக்கெட் குண்டுகள் வருவதை எச்சரிக்கும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. புதன் நள்ளிரவில் காசாவில் இருந்து 80 ரொக்கெட் குண்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.

இஸ்ரேல் இராணுவ வாகனம் ஒன்றின் மீது பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த ஏவுகணை காசா எல்லையில் காலியாக இருந்த பஸ் மீது விழுந்ததாகவும் அருகில் இருந்த வீரர் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.

மேற்குக் கரையிலும் வன்முறைகள் நீடித்து வருகின்றன. கடந்த மே 10 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் அங்கு இதுவரை 21 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் 322 மில். டொலர் சேதம்

இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல்களால் காசாவில் 322 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாக காசாவின் அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. குறைந்தது 184 அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் 33 ஊடக மையங்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இதனால் 92 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. தவிர 1,335 வீட்டு அலகுகள் முழுமையாக அல்லது மோசமான சேதத்திற்கு உள்ளாகி இருப்பதோடு 13,000 கட்டடங்கள் பகுதி அளவு அழிக்கப்பட்டுள்ளன.

Fri, 05/21/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.